×

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம் … தொடர்ந்து 6வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்!!

சென்னை : ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பின் பட்டியலில், இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் ஒன்றிய கல்வி அமைச்சகம் கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிட்டு வருகிறது. இதற்காக என்.ஐ.ஆர்.எஃப். என்ற தேசிய தரவரிசை மதிப்பீடு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்கள், மருத்துவம், பொறியியல், சட்டம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளாக தரவரிசைப்படுத்தி அறிவித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் 2024-ம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஐஐடி சென்னை முதலிடமும், இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு இரண்டாமிடத்தையும், ஐஐடி மும்பை மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களில் மும்பை ஐஐடி 3வது இடம், டெல்லி ஜஜடி 4வது இடம், கான்பூர் ஐஐடி 5வது இடம் பிடித்துள்ளன.

சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டியலில், ஐஐடி சென்னை 9 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.மருத்துவ கல்வி நிறுவனங்களில் நாட்டிலேயே டெல்லி எய்ம்ஸ் முதலிடம். வேலூர் சி.எம்.சி. கல்லூரி 3ம் இடம் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் வேலூர் விஜடிபல்கலைக்கழகம் 10வது இடத்தை பிடித்துள்ளது. பல் மருத்துவக் கல்லூரி தரவரிசையில் சென்னை சவீதா கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. கலைக்கல்லூரிகள் பட்டியலில் டெல்லி ஹிந்து கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது. கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரி 7வது இடமும், சென்னை லயோலா கல்லூரி 8வது இடமும் பிடித்துள்ளன. 2024ம் ஆண்டுக்கான NIRF தரவரிசையின் மாநில பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம் வகித்துள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

The post இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம் … தொடர்ந்து 6வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்!! appeared first on Dinakaran.

Tags : Top Education Institute ,India ,Chennai IIT ,Chennai ,Union Ministry of Education ,Education Institute ,
× RELATED மாணவர்களை உள்ளே அழைத்து கொண்டு விட,...