×

கொரோனா காலத்திற்கு பின் இரண்டு மடங்கு அதிகரிப்பு; 108 நாடுகளில் உயர்கல்வி படிக்கும் 13.4 லட்சம் மாணவர்கள்: கனடா முதலிடம்; சீனா மீதான மோகம் குறைந்தது

புதுடெல்லி: உயர்கல்விக்காக 108 நாடுகளில் 13.4 லட்சம் இந்திய மாணவர்கள் படித்து வரும் நிலையில், கனடாவில் அதிகபட்சமாகவும், சீனாவில் கொரோனா காலத்திற்கு பின் மிகவும் குறைந்தும் உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவது பலரது ஆசையாக இருந்தாலும், வெளிநாட்டில் வேலை செய்யவும், அங்கேயே குடியேறவும், உயர்தரமான கல்வியை கற்கவும், பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் பலர் செல்கின்றனர். அந்த வகையில் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சக தரவுகளின்படி, நடப்பு ஆண்டில், 108 நாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதம் வரை 13,35,878 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கொரோனா காலத்திற்கு முன்பு அதாவது 2019ம் ஆண்டில் வெளிநாட்டில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 6,75,541 ஆக இருந்தது. வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்பதால், இன்னும் அதிகமாக இருக்கும் என்கின்றனர்.

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் 10.71 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, செக் குடியரசு மற்றும் ஜார்ஜியா ஆகிய ஐந்து நாடுகளில் 1.25 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர முதல் தேர்வாக கனடாவை தேர்வு செய்கின்றனர். தற்போது 4.27 லட்சம் இந்திய மாணவர்கள் அங்கு படிக்கின்றனர். அதேசமயம் 2019ல் அவர்களின் எண்ணிக்கை 2,18,520 ஆக இருந்தது. கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது. கனடாவில் படிக்கும் போது வேலை வாய்ப்புகள் அதிகம், குடியுரிமை பெறுவதற்கான விதிகள் மிகவும் எளிதானது என்பதால், அங்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உயர்கல்வி படிப்பதற்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் இரண்டாவது விருப்பமான நாடாக அமெரிக்கா உள்ளது.

தற்போது அமெரிக்காவில் 3,37,630 மாணவர்கள் படிக்கின்றனர். அதே 2019ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,93,124 ஆக இருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3,51,106 ஆக இருந்தது. உயர்கல்விக்கு அமெரிக்கா சிறந்தது என்பதாலும், வேலைவாய்ப்பு ரீதியாக அதிகபட்ச வாய்ப்புகளைக் கொண்டுள்ளதால் அங்கு செல்கின்றனர். மூன்றாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தில் 1.85 லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். அதே கொரோனா காலத்திற்கு முன் 58,780 மாணவர்கள் படித்து வந்தனர். கிட்டத்தட்ட மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் முதுகலை படிப்பு ஒரு வருட காலத்தில் முடித்துவிட்டாலும், இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் விசா பெற முடியும் என்பதால் அங்கு செல்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் 1,15,094 இந்திய மாணவர்கள் படித்து வந்த நிலையில், 2024ல் 1,22,202 ஆக சற்று அதிகரித்துள்ளது.

உயர்கல்வி படிப்பதற்கான மேலும் விருப்ப நாடுகளின் பட்டியலில், 5 நாடுகள் உள்ளன. அந்த வகையில் ஜெர்மனியில் 42,997 பேர், யுஏஇ-யில் 25,000 பேர், ரஷ்யாவில் 24,940 பேர், செக் குடியரசில் 16,500 பேர், ஜார்ஜியாவில் 16,093 மாணவர்கள் படிக்கின்றனர். அதேநேரம் சீனாவுக்கு உயர்கல்வி படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 2019ம் ஆண்டில், 15,207 மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது 8,580 ஆகக் குறைந்துள்ளது. கொரோனா, இந்தியா – சீனா உறவில் சிக்கல் போன்ற காரணங்களால் சீனாவுக்கு சென்று உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

The post கொரோனா காலத்திற்கு பின் இரண்டு மடங்கு அதிகரிப்பு; 108 நாடுகளில் உயர்கல்வி படிக்கும் 13.4 லட்சம் மாணவர்கள்: கனடா முதலிடம்; சீனா மீதான மோகம் குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Canada ,China ,New Delhi ,United States ,United Kingdom ,
× RELATED கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் கடும் நிலநடுக்கம்