×

காற்றாலையைத்தொடர்ந்து சூரிய மின் உற்பத்தியிலும் தமிழகம் சாதனை: புதிய உச்சத்தை தொட்டது

நெல்லை: காற்றாலை மின் உற்பத்தியை தொடர்ந்து சூரிய மின் உற்பத்தியிலும் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிய கட்டிடங்கள் புதிய மின்சாதனங்கள் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் மின் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோடைகாலங்களில் மின் நுகர்வு ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை தொடுகிறது. இதற்கு தேவையான மின்சாரத்தை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பல்வேறு வழிகளில் மின் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.

இதனால் தடையற்ற மின்சாரம் வழங்கும் நிலை நீடிக்கிறது. வழக்கமான மின் உற்பத்தி ஆதாரங்கள் தவிர மாசு ஏற்படாத காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்திக்கு தமிழகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் மூலம் சீசன் காலங்களில் 4,500 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரம் பல நாட்கள் பெறப்படுகிறது. குறிப்பாக நெல்லை உள்ளிட்ட தென் மண்டலங்களில் உள்ள அதிக தனியார் காற்றாலைகள் மூலம் சீசன் காலத்தில் மின் உற்பத்தி அதிகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சூரிய மின் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக சோலார் பேனல்கள் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் அமைக்கப்பட்டு வருகிறது. தனியார் சோலார் பேனல்களை அமைப்பதற்கு அதிக ஊக்கம் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 8900 மெகாவாட் அளவிற்கு சோலார் மின் உற்பத்தி தயாரிக்கும் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சூரிய மின் உற்பத்தி அளவு நாளுக்கு நாள் அதிகரித்து புதிய இலக்கை எட்டி வருகிறது.

இந்த வகையில் தமிழகத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி 5704 மெகாவாட் மின் உற்பத்தி என்பது அதிகபட்ச சாதனையாக இருந்தது. இது கடந்த 9ம் தேதி 5,979 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. மேலும் அதிகபட்சமாக 41.40 MU மின் கட்டமைப்பில் உட்கொள்ளப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதன்மையாக இருப்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது என மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post காற்றாலையைத்தொடர்ந்து சூரிய மின் உற்பத்தியிலும் தமிழகம் சாதனை: புதிய உச்சத்தை தொட்டது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nellai ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...