×

கலெக்டர் அலுவலக சந்திப்பு முதல் செட்டிக்குளம் வரை பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி தொடர்ந்து நடக்குமா?

*நெடுஞ்சாலைத்துறை பணம் கேட்பதால் திடீர் சிக்கல்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக ரவுண்டானா முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரை பாதாள சாக்கடைக்கான குழாய் பதிக்க, நெடுஞ்சாலைத்துறை இன்னும் அனுமதி வழங்காததால், பணிகள் தொடர்ந்து நடக்குமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. இதில் 18 வார்டுகளில் முழுமையாகவும், 17 வார்டுகளில் பகுதியாகவும் என ரூ.130 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்துக்காக நாகர்கோவில் மாநகரில் 115 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் கழிவு நீரேற்று நிலையமும், வலம்புரிவிளையில் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு செய்யப்படும் தண்ணீர் அங்கிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெங்கம்புதூர் கால்வாயில் விட திட்டமிடப்பட்டு, அதற்காகவும் தனியாக 5 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன.

பாதாள சாக்கடைக்காக நாகர்கோவில் கே.பி. ரோட்டில் பால்பண்ணை சந்திப்பிலிருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் குழாய் பதிக்கப்பட வேண்டி இருக்கிறது. இந்த பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. சாலையில் 10 அடிக்கு தோண்டி அதில் மேன்ஹோல் அமைப்பதற்கான குழாய்கள் பதிக்கப்படுகின்றன. தற்போது கலெக்டர் அலுவலகம் அருகில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. கலெக்டர் அலுவலக சந்திப்பு ரவுண்டானா வரையில் இந்த பணிகள் திட்டமிடப்படி நடந்து விடும். ஆனால் கலெக்டர் அலுவலக சந்திப்பு ரவுண்டானாவில் தொடங்கி செட்டிக்குளம் சந்திப்பு வரையிலான சாலையில் பணிகள் மேற்கொள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை இன்னும் அனுமதிக்க வில்லை. சாலையை தோண்ட பணம் கட்ட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை கோரி வருகிறது. இதனால் பாதாள சாக்கடை பணியை மேற்கொண்டு வரும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணிகள் எடுத்து நடத்தி வரும் ஒப்பந்த நிறுவனம் இந்த பணத்தை செலுத்த முடியாது என கூறி உள்ளது. அவ்வாறு செலுத்துவதாக இருந்தால் பணியை மேற்கொள்ள முடியாது என்ற நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை இன்னும் அனுமதி கொடுக்க வில்லை. இதனால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காண்ட்ராக்டர் பணியை செய்யாமல் சென்று விட்டால், மீண்டும் அவரை அழைத்து வந்து பணிகளை செய்வது பெரும் சிரமம் ஆகும். எனவே நெடுஞ்சாலைத்துறை இந்த விஷயத்தில் உடனடியாக அனுமதி வழங்கி பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சவாலான பணி

தற்போது பணிகள் நடந்து வரும் பால்பண்ணை சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலக சந்திப்பு வரையிலான பகுதி, மிகப்பெரிய சவாலானதாக உள்ளது. சாலையில் பிரதான குடிநீர் குழாய்கள் செல்கின்றன. தனியார், பிஎஸ்என்எல் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் இயந்திரத்தை வைத்து தோண்ட முடியாத நிலையில், குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல், தொழிலாளர்கள் தான் குழி தோண்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். இந்த பணியும் மிகப்பெரிய சவாலாக உள்ளதாக, பணியாளர்கள் கூறினர். மேலும் கலெக்டர் அலுவலக ரவுண்டானா பகுதியில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. அந்த குழாய்கள் சேதம் அடையாமல் தோண்ட வேண்டும் என்ற நிலையும் உருவாகி உள்ளதாக தொழிலாளர்கள் கூறினர்.

The post கலெக்டர் அலுவலக சந்திப்பு முதல் செட்டிக்குளம் வரை பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி தொடர்ந்து நடக்குமா? appeared first on Dinakaran.

Tags : Chettikulam ,Nagercoil ,Nagercoil… ,Dinakaran ,
× RELATED பெண்கள் கை காட்டியும் நிற்காமல் சென்ற...