×

அருள் தரும் அஞ்சனை மைந்தன்

பல வருடங்களுக்கு முன், மயிலாப்பூரில்  அனுமன் ஜெயந்தி பதினைந்து நாள் உற்சவமாகக் கொண்டாட நிகழ்ச்சிக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். பல வித்வான்கள் தினமும் மாலையில் இன்னிசைக் கச்சேரி நடத்தி, எதுவும் வாங்காமல் கைங்கர்யமாக செய்வார்கள். நானும், தம்புரா வித்வான் ஸ்ரீ வெங்கட்ராமனும் ஒவ்வொரு வித்வானையும் வீட்டில் சென்று பார்த்துப் பேசி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்வது வழக்கம். வழக்கமாகக் கச்சேரி நிகழ்த்தும் எம்.எல்.வசந்தகுமாரி, இலங்கை நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டதால், அந்த வருடம் அவரை ஏற்பாடு செய்ய முடியவில்லை. ஒரு நாள், பிரபல பாடகர் வீட்டிற்கு சென்றோம். அவர், கோலவிழி அம்மன் கோயிலுக்குச் சென்றிருப்பதாகக் கூறினார்கள்.

அவர் வரும் வரை காத்திருந்தோம். அவர் வந்ததும், அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியைப் பற்றி கூறினோம். சந்தோஷப்பட்டவர், “நம்ம அனுமன் ஜெயந்தி விழாவுல பாடக் கொடுத்து வெச்சிருக்கணுமே! என்னிக்கு பாடலாம்?” என்று கேட்டார். காலியாக இருந்த சில தேதிகளைச் சொன்னோம். உடனே அவர் “டிசம்பர் 31 அன்று வெச்சுக்கலாம்!” என்று சொன்னார்.உடனே நான், “அடுத்த நாள் புது வருடம் பொறக்கற நேரத்துல ராத்ரி 12 மணிக்கு ஸ்வாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருவார்கள்.

அவர்களும் உங்களின் பாடலை கேட்பார்கள். நல்ல நாள். மகிழ்ச்சி” என்றேன். உடனே அந்த பிரபல பாடகர் சிரித்துக் கொண்டே, “அதுவும் நல்லதுதான். புது வருஷம்… அனுமான் சந்நதியில் நம்ம கச்சேரியோடுதான் பொறக்கட்டுமே! ஒண்ணு பண்ணுங்க, 31 – ஆம் தேதி இரவு பத்து மணிக்கு கச்சேரி ஆரம்பம்னு அறிவிப்பு கொடுங்க, புது வருடம் பொறந்தப்றம் கச்சேரியை முடிச்சுக்கறேன்!” என்றார்.

“பெரிய போஸ்டர்லேயும் அப்படியே போட்டுடலாம்தானே?” என்று தயங்கியபடி கேட்டேன். “நிச்சியமா… 31-ஆம் தேதி ராத்திரி ஸ்வாமி அருளால, அனுமன் ஜெயந்தி விழாவுல நாள் பாடுறான்!” என்று விடை கொடுத்தார். உற்சவம் நடந்துகொண்டிருந்தது. டிசம்பர் 25-ஆம் தேதி, மதியம், வாசலில் ஒரு காரில் வந்து இறங்கினார், அந்த பாடகர்! நான் எழுந்து சென்று வரவேற்றேன். அவர் முகம் வருத்தத்தோடு, என் கைகளைப் பற்றிக்கொண்டவர், “ரமணி அண்ணா… என்னை மன்னிக்கணும். இந்த வருடம் எனக்கு இங்க பாட பிராப்தம் இல்லை. எதிர்பாராம, அதே 31-ஆம் தேதியில் பம்பாய் சண்முகானந்தா ஹால்ல கச்சேரி. திடீர்னு ஏற்பாடாயிருக்கு. அதனால அடுத்த வருடம் நம்ம உற்சவத்துலே வந்து பாடுறேன். என்னை மன்னிச்சுடுங்க!” என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“சார்… அப்படி சொல்லக்கூடாது. நீங்க பாடறதா ஊர் பூரா போஸ்டர் ஒட்டி யாச்சு… பம்பாய் கச்சேரி வாய்ப்புகள் உங்களுக்கு நிறைய வரும். அதனால இந்த அனுமன் ஜெயந்தி கச்சேரியை விட்டு கொடுக்கக் கூடாது!” என்றேன். “இல்லே ரமணி அண்ணா. இந்த வருடம் என்னை விட்டுடுங்க. பம்பாய்ல எல்லாமே ரெடியாகிடுச்சி இனிமே ஒண்ணும் பண்ண முடியாது. என்னை மன்னிச்சுடுங்க!” என்றார்!

அனைவரும் என்ன செய்யப் போகிறோம் என்று குழம்பினோம். அடுத்த நாள், நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம். அதன்படி 31-ஆம் தேதி இரவு கச்சேரிக்கு ஒரு வித்வானைப் பார்த்து மாற்று ஏற்பாடு செய்வதென முடிவு பண்ணினோம். ஆனால், அது அவ்வளவு சுலபமில்லை, என்பது அனுபவத்தில் தெரிந்தது. இந்த உற்சவத்தில் 31-ஆம் தேதி இரவு கச்சேரி இல்லாமலேயே விட்டுவிட வேண்டியதுதான் என்றுகூட ஒரு முடிவெடுத்தேன். அதற்குள் ஒருவர், “ஸ்ரீலங்காவிலிருந்து எம்.எல்.வி. வந்தாச்சானு விசாரிச்சுப் பார்க்கலாமே” என்றார்.

உடனே மயிலை லஸ் கார்னர் ஒரு லாட்ஜில் தங்கி இருந்த எம்.எல்.வி.யின் கணவர் விகடம் கிருஷ்ணமூர்த்திக்கு போன் போட்டு, விசாரித்தேன். அதற்கு அவர், “என்ன ரமணி அண்ணா! லங்காலேர்ந்து எம்.எல்.வி. வந்து நாலு நாளாச்சே. வரும்போதே உடல் நிலை சரியில்லை. அதனால இஸபெல்லா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம். வார்டு நம்பர் 27… நீங்க அனுமான் பிரசாதத்தோட போய்ப் பார்த்துட்டு வாங்க’’ என்று கூறினார்.

“ஸ்ரீ லங்காவிலேர்ந்து திரும்பி வந்த விஷயமே எனக்கு தெரியாது, கிருஷ்ண மூர்த்தி. அவங்கள அனுமன் பிரசாதத்துடன் போய்ப் பார்க்கிறேன்!” எனக் கூறிவிட்டு போனை வைத்தேன். அன்று மாலை, ஸ்ரீ அனுமனிடம் மனப்பூர்வமாகப் பிரார்த்தனை செய்துகொண்டு பிரசாதத்துடன் இஸபெல்லாவுக்குப் புறப்பட்டேன். வார்டு எண் 27-ல், தயங்கியபடியே உள்ளே நுழைந்தேன். சோர்வாகப் படுத்திருந்தார் எம்.எல்.வி.! அருகில் வயலின் வித்வான் கன்யாகுமரி அமர்ந்திருந்தார்.

உடல்நலம் விசாரித்துவிட்டு, குங்குமப் பிரசாதத்தைக் கொடுத்தேன். சிரமப்பட்டு அதை நெற்றியில் இட்டுக்கொண்ட எம்.எல்.வி., “அனுமன் ஜெயந்தி உற்சவம் நடந்துகொண்டிருக்கா? இந்த வருடம் யார் யாரெல்லாம் கச்சேரி?” என்று விசாரித்தார். அந்த பிரபல பாடகர் செய்த விஷயம் உட்பட அனைத்தையும், ஜெயந்தி உற்சவம் ஜனவரி முதல் தேதியுடன் பூர்த்தி அடையும். விவரத்தையும் தெரிவித்துவிட்டு, எம்.எல்.வி.யிடம் விடைபெற்றுப் புறப்பட்டேன். வாசற்படி தாண்டியிருக்க மாட்டேன்.

“ஸ்வாமி… கொஞ்சம் இப்படி வாங்க!” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். அழைத்தது எம்.எல்.விதான்! அருகில் சென்றேன். அவர் கண்களிலிருந்து நீர். அவர் சொன்னார்;
“இந்த வருட ஜெயந்தி உற்சவத்துல ‘நீங்க வந்து அவசியம் பாடணும்மா’னு என்று என்னைக் கூப்பிடாமலேயே திரும்பிப் போறேளே… இது நியாயமா? இதுவரைக்கும் ஒரு வருடம்கூட
உற்சவத்தில் நான் பாடாம இருந்ததில்லை” உடனே நான், “அப்படி இல்லேம்மா… இப்போ உங்களுக்கு உடம்பு சரியில்லையே கச்சேரி பண்ணக் கூப்டறது தர்மமாகுமா? அதனாலதான்…” என்று தயங்கினேன். உடனே அவர் “அதெல்லாம் ஒண்ணுமில்லே. உடம்பு சரியா போய்டும். அந்த பாடகர் பாடறதா மொதல்ல சொன்ன அந்த 31-ஆம் தேதி அன்னிக்கு எனது கச்சேரிய வெச்சுடுங்க! பெரிய விளம்பரம் எல்லாம் வேண்டாம்.

அன்னிக்குக் காலையில சில பேப்பர்ல மட்டும் சின்னதா ஒரு விளம்பரம் கொடுத்துடுங்க. போதும்! இன்னும் அஞ்சாறு நாள் இருக்கே… அதுக்குள்ள அனுமன் கிருபையால உடம்பு நல்ல குணமாயிடும்!” என்று எனக்கு தைரியம் கூறி அனுப்பி வைத்தார். டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 9 மணி. சொன்னபடி பக்கவாத்ய கோஷ்டியுடன் மேடை ஏறிய எம்.எல்.வி., அற்புதமாக பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நள்ளிரவு சரியாக மணி 12.00 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. பலத்த கரகோஷத்திற்கு இடையே கச்சேரியை நிறைவு செய்தார்!

அடுத்த நாள் உற்சவ பூர்த்தி தினம். அன்று மாலை மாண்டலின் சீனிவாஸ் கச்சேரி. இடைவிடாமல் கூட்டம், சந்நதியில் இருந்து கொண்டே இருந்தது. மதியம் 3.00 மணி இருக்கும். நண்பர் ஒருவர் என்னிடம் வேகமாக வந்து, அந்த பிரபல பாடகர் வந்திருப்பதாகச் சொன்னார். குழப்பத்துடன் வெளியே வந்து பார்த்தேன். தனது கச்சேரி கோஷ்டியுடன் பதட்டமான முகத்தோடு நின்றிருந்தார், அவர். நான் ஆச்சரியத்துடன், “சார்! பம்பாய் கச்சேரி முடிஞ்சு எப்போ வந்தேள்?” என்று கேட்டேன்.

“இன்னிக்குக் காலையில ஃபிளைட்டை புடிச்சு வந்து சேர்ந்தோம். ரமணி அண்ணா… நான் எப்படியும் இன்னிக்கு இந்த சந்நிதானத்தில் கச்சேரி பண்ணியே ஆகணும்… நீங்கதான் ஏற்பாடு பண்ணனும்!” என்று பரபரத்தார். நான், “அது கஷ்டமாச்சே சார்… இன்னியோட உற்சவம் முடிகிறது. மாலையில் மாண்டலின் சீனிவாஸ் கச்சேரி! வேற கேப்பே இல்லையே” என்றேன்.“நான் இந்த நேரமே கச்சேரி பண்ணத் தயாரா பக்கவாத்யக் காரங்களோட வந்திருக்கேன். ஸ்வாமிக்கு முன்னால நான் பாடியே ஆகணும்!” என்றார்.

“என்ன விஷயம்… ஏன் இப்படி அவசரம்?” என்றேன். அதற்கு அந்த பாடகர், “அந்தக் காரணத்தை மேடைல உட்கார்ந்து ஜனங்களுக்கு முன்னாலேயே சொல்றேன்” என்று சொல்லிவிட்டு மேடையேறினார். மைக் பிடித்துப் பேச ஆரம்பித்தார். “நேத்து ராத்ரி புது வருடம் பொறக்கற சமயத்துல இங்கே ஸ்வாமிக்கு முன்னாடி கச்சேரி பண்ணியிருக்கணும். ஆனா, என்னை வற்புறுத்தியதால் பம்பாய் சண்முகானந்தா ஹால் கச்சேரிக்கு ஒப்புக் கொண்டு போயிட்டேன். நேற்று மாலை சரியா ஆறு மணிக்கு பம்பாய் மேடையில் அமர்ந்தேன். ஹாலில் எள் போட்டால் எள் விழாது… அவ்வளவு கூட்டம். ஸ்வாமியை பிரார்த்தித்துக் கொண்டு பாட முயற்சித்தேன். என்ன விபரீதம்… எனக்கு குரலே எழும்பவில்லை.

என் பின்னாலிருந்து கழுத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் தன் கைகளை வைத்து அழுத்தியபடியே… ‘என் சந்நதியிலே பாடறதா வாக்கு கொடுத்துவிட்டு, இங்கே வந்துட்டியே… எங்கே, பாடு பார்ப்போம்!’ என்று சொல்வது போல் உணர்ந்தேன். உடனே நான், ‘ஆஞ்சநேயா, என்னை மன்னிச்சுடு. இனி அப்படி பண்ணவே மாட்டேன். என் ஜீவன் இருக்கற வரைக்கும் வருடா வருடம் உன் சந்நதியிலே வந்து நிச்சயம் பாடறேன்… இது சத்தியம். இப்போ பாடுறதுக்கு எனக்குக் குரலை அனுக்கிரகம் பண்ணுனு பிரார்த்திச்சேன்.

உடனே குரல் விடுபட்டுது. நேற்று கச்சேரி ரொம்ப நல்லா அமைஞ்சது. அதான் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்றதுக்காகத்தான் பம்பாய்லேர்ந்து காலையில் ஃபிளைட்டை பிடிச்சு ஓடி வந்து, இப்போ கச்சேரி பண்ணப் போறேன்!”என பேசி முடித்த அந்த பிரபல பாடகரின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர்கசிந்தது. பிறகு, கச்சேரி ஆரம்பமானது. இந்த அடியவன் பார்த்த இந்த அற்புதத்தில் இதுவும் ஒன்று.

ரமணி அண்ணா

The post அருள் தரும் அஞ்சனை மைந்தன் appeared first on Dinakaran.

Tags : Ajanai Maidan ,Anuman Jayanti ,Mayilapur ,Inishi ,Tampura Vidwan ,Sri Venkatraman ,Gracious Anjanai Maidan ,
× RELATED நிதி நிறுவன மோசடி:...