×

அரங்கனுக்கு அச்சுதப்பர் எடுத்த திருவிழா

“கங்கையிற் புனிதமாய காவிரி நடுவுபட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம்’’
– என்று தொண்டரடிப் பொடியாழ்வார் போற்றும் திருவரங்கத்தில் திகழும் பெருங்கோயில், தமிழகத்தின் தொன்மையான திருக்கோயில்களுள் ஒன்றாகும். இங்கு திகழும் பள்ளிகொண்ட பெருமானின் திருக்கோலத்தை 1600 ஆண்டுகளுக்கு முன்பே இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில்,

“வீங்கு நீர்க்காவிரி வியன் பெருந்துருத்தி
திருவர் மார்பன் கிடந்த வண்ணமும்…’’
– எனப் போற்றியுள்ளார்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், ‘‘பூலோக வைகுந்தம்’’ என அழைக்கப் பெறுவதுமாகிய திருவரங்கத்துக் கோயிலில் நிகழும் திருவிழாக்களில் பெருஞ்சிறப்புடையது “வைகுண்ட ஏகாதசி’’ பெருவிழாவாகும். திரு அத்யயன உற்சவம் எனும் இவ்விழா திருமொழி, திருவாய்மொழித் திருநாள் எனச் சிறப்பாகக் குறிக்கப் பெறுவதாகும். தமிழ்தான் திருவரங்கன், திருவரங்கன்தான் தமிழ் என்று போற்றுமளவு சிறப்புடையது இத்திருவிழா.

பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என்று 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின்போது முதல் பத்து நாள் விழா அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து விழா திருமாமணி மண்டபத்திலும் நடைபெறும். நம்பெருமான் என அழைக்கப்பெறும் திருவரங்கனின் உற்சவத் திருமேனி எல்லா ஆழ்வார்களின் திருவிக்கிரகங்களோடும், ஆசார்யார்களின் திருவுருவங்களோடும் எழுந்தருளப் பெற்று விழா நிகழும்.

பகல் பத்தின்போது திருமொழி பாசுரங்களும், ராப்பத்தில் திருவாய்மொழி பாசுரங்களும் அபிநயங்களுடன் அரையர்களால் சேவை சாதிக்கப் பெறும். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் இங்கு இறையுணர்வோடு சங்கமிக்கும். பகல் பத்து திருநாளில் பத்தாம் நாள் நம்பெருமான் மோகினி அலங்காரத்துடனும், வைகுந்த ஏகாதசியன்று ரத்தின அங்கியுடனும், மூலவர் முத்தங்கியுடனும் சேவை சாதிப்பார்கள். ஏகாதசியன்று காலை நம்பெருமான் பரமபதவாசல் வழியே வந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளுவார். ராப்பத்து எட்டாம் திருநாளில் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ‘‘வேடுபறி’’ கண்டருளுவார். சாற்று முறையன்று ‘‘நம்மாழ்வார் மோட்சம்’’ சீர்மிகு காட்சியாகத் திகழும். தமிழ் பாடிய ஆழ்வார்களைப் போற்றும் பெருவிழாவாக இவ்விழா இருபத்தோரு நாட்கள் நிகழும்.

தஞ்சை நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்த செவ்வப்ப நாயக்கரின் ஒரே மகனாக உதித்தவர் அச்சுதப்ப நாயக்கராவார். திருவரங்கத் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் காணப்பெறும் கல்வெட்டொன்று ‘‘செவ்வப்ப நாயக்கருக்கும் மூர்த்தி அம்மையாருக்கும் திருவரங்கன் திருவருளால் பிறந்த அச்சுதப்ப நாயக்கர் திருவரங்கனுக்குக் கொடுத்த கொடையின் சாசனம்’’ – என்று தொடங்குகின்றது. அக்கல்வெட்டில், அரங்கனுடைய திருவிழாக்களுக்காக 6200 பொன் வருவாயுடன் தஞ்சாவூர் உசாவடியிலும், நார்த்தாமலை சீமையிலும் அளித்த 25 கிராமங்கள் பற்றியும், அதன் வருவாயிலிருந்து ஒவ்வொரு நாள் விழாவும் எவ்வாறு நிகழ வேண்டும் என்ற விவரங்களும் கூறப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு எழுதப்பெற்ற ஆண்டோ கி.பி.1570 ஆகும்.

திருமொழித் திருநாள் என்றும், திருவாய்மொழித் திருநாள் என்றும் குறிப்பிட்டு அத்திருநாள்களுக்கு செய்யப்பெறுகின்ற அமுது வகைகள் பற்றியும் அக்கல்வெட்டு விளக்குகின்றது. அதிரசம், வடை, சர்க்கரைப் பொங்கல், நெய்யமுது, தயிரமுது, பொரி அமுது, சுகியன், இட்டிலி, புளி ஓகரம், வெச்சு அமுது, பானகம், சம்பா தளிகை, அப்பம், கறியமுது, தோசை, கூட்டுக்கறியமுது, புளிக்கறியமுது, இலையமுது (வெற்றிலை), அடைக்காயமுது (பாக்கு) போன்ற அமுது வகைகளை கூன்களில் வைத்து நிவேதிக்க கட்டளைகள் கூறப் பெற்றுள்ளன. கூன் என்பது குறிப்பிட்ட வடிவில் செய்யப்பெறும் மண் பானைகளாகும். கூனில் அமுதுகள் செய்து படைக்கப்படும் மரபு இன்றும் திருவரங்கம் கோயிலில் தொடர்ந்து நிகழ்கின்றது. திருச்சிக்கு அருகிலுள்ள ஜீயபுரம் எனும் ஊரிலிருந்து கூன்கள் கோயிலுக்கு அனுப்பப் பெறுகின்றன.

கி.பி.1564 முதல் 1616 வரை தஞ்சை அரசகாரகத் திகழ்ந்த அச்சுதப்ப நாயக்கர் திருவரங்கனுக்குத் திருவிழா எடுக்கக் கொடைகள் அளித்ததோடு எண்ணிலா அணிகலன்களையும் கொடுத்து வரலாற்றில் அழியாப் புகழ்பெற்றார். அவர் 400 ஆண்டுகளுக்கு முன்பு திருமொழி, திருவாய்மொழித் திருநாள் விழாக்களுக்காகக் கொடுத்த அதே அணிகலன்கள்தான் இன்றளவும் அரங்கப் பெருமான் சூடிக்கொண்டு பரமபத வாசலில் காட்சி கொடுக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வைகுந்த ஏகாதசியன்று எம்பெருமான் சிவப்பு பச்சை ரத்தினக் கற்களாலும் வைரங்களாலும் அணி செய்யப்பெற்ற ரத்தின அங்கியும், வைரம் சிவப்பு மற்றும் பச்சைக் கற்களாலான கிரீடராஜம் எனும் மகுடமும் பூண்டு சிவப்பு மற்றும் வைரக்கற்கள் பதிக்கப்பெற்ற அபயஹஸ்தம் எனும் கையணியோடு பரமபத வாசல் வழியே வந்து லட்சோபலட்சம் பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கின்றார். அதே நேரத்தில் மூலவர் முத்தால் செய்யப்பெற்ற முத்தங்கியணிந்து அருள் பாலிக்கின்றார். இவை அனைத்தும் அச்சுதப்ப நாயக்கர் அரங்கனுக்குக் கொடுத்தவையாகும்.

ராமபத்ராம்பா எனும் வடமொழிப் பெண் புலவர் எழுதிய ரகுநாத நாயகாப்யுதயம் எனும் சுவடி நூலும், ரகுநாத நாயக்கர் எழுதிய சங்கீத சுதா எனும் நூலும், ராஜ சூடாமணி தீட்சிதர் எழுதிய ருக்மிணி பரிணயம் எனும் ஏட்டுச் சுவடியும், செங்கல்வ காளகவி எழுதிய ராஜகோபால விலாசமும், அச்சுதப்ப நாயக்கர் செய்த மேற்குறிப்பிட்ட கொடைகள் பற்றி விரிவாகக் கூறுகின்றன.

திருவரங்கனுடைய விமானத்தைப் பொற்தகடுகளால் போர்த்தியது, மணிகள் இழைக்கப் பெற்ற தங்க சிம்மாசனம் அளித்தது, கிரீடராஜம் எனும் மகுடம் தந்தது, ரத்தினாங்கி, அபயஹஸ்தம்,
முத்தங்கி போன்றவை வழங்கியது. சித்திரைத் தேர்த்திருவிழா எடுத்தது, எட்டாம் பிரகாரம் வகுத்தது போன்ற எண்ணிலா பணிகள் அவனால் நிகழ்ந்தன என்பதை மேற்குறித்த வடமொழி, தெலுங்கு நூல்கள் 350 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளன.

கி.பி.1594ல் வெட்டுவிக்கப்பெற்ற அச்சுதப்ப நாயக்கரின் கல்வெட்டொன்று திருவரங்கம் ஆவணி கீழ மாடவீதியிலுள்ளது. அதில் அச்சுதப்ப நாயக்கர் திருவரங்கத்துப் பட்டர்களான பஞ்சி பட்டர், திருமலையப்பர், நாராயணன் என்பவர்களிடமிருந்து 110 பொன் விலையாகக் கொடுத்து ஆவணி கீழ மாடத் திருவீதியில் மனை வாங்கி ராமானுஜக் கூடம் அமைத்தார் என்று கூறப் பெற்றுள்ளது.

இவ்வாறு எண்ணிலா பணிகள் செய்த அச்சுதப்ப நாயக்கர் மிகச் சிறப்பாக எடுத்த தமிழ்ப் பாசுரங்கள் பாடும் பெருவிழாவான திருவரங்கத்து அத்யயன உற்சவம் (வைகுந்த ஏகாதசி) தொடர்ந்து நிகழ்வதோடு, அவர் கொடுத்த அணிகலன்களைப் பெருமான் இன்றும் சூடி வருவதைக் காணும்போது திருவரங்கத்து திருக்கோயில் நிர்வாக மரபு கண்டு பெருமிதம் கொள்ளலாம். கூன் எனும் மண்பாண்டங்களில் அமுது அளிக்கும் பழமை கண்டு பூரிப்படையலாம். அரங்கனோடு ஒன்றிய அச்சுதப்ப நாயக்கரை ஏகாதசி நாளில் நினைந்து போற்றுவோம்.

முதுமுனைவர் குடவாயில்
பாலசுப்ரமணியன்

The post அரங்கனுக்கு அச்சுதப்பர் எடுத்த திருவிழா appeared first on Dinakaran.

Tags : Achuthapar ,Perungol ,Tamil Nadu ,Lord Pallikonda ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...