டெல்லி: செபி தலைவர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி குழும முறைகேடுகளை செபி விசாரணை நடத்தி வரும் நிலையில், செபி தலைவர் மாதபி புச் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததை அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. இதன்மூலம், அதானி குழுமத்துக்கும் செபி தலைவருக்குமான தொடர்பு நிரூபிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில்; இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடப்பதாக வைத்துக் கொள்வோம். போட்டியில் நடுவர் சமரசம் செய்கிறார் என்பது, போட்டியைப் பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும், போட்டியை விளையாடுபவர்களுக்கும் தெரிகிறது என்றால், அந்த போட்டி என்னவாகும்? போட்டியின் நேர்மை மற்றும் முடிவு என்னவாக இருக்கும்? போட்டியில் பங்கேற்கும் ஒருவராக நீங்கள் அதை எப்படி உணருவீர்கள்? இதுதான் இந்திய பங்குச்சந்தையில் நடக்கிறது.
செபி தலைவர் மாதாபி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், அதற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடியா? செபி தலைவரா அல்லது கவுதம் அதானியா? கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரிக்குமா? சில்லறை முதலீட்டாளர்களின் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்பதும், அந்த விசாரணையில் என்ன தெரியவரும் என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post செபி தலைவர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?.. அடுக்கு அடுக்காக கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி appeared first on Dinakaran.