×

மிருகண்டா அணையில் வினாடிக்கு 255 கனஅடி நீர் திறப்பு; கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

கலசபாக்கம், ஆக.12: கலசபாக்கம் அருகே தொடர் மழையால் நிரம்பி வரும் மிருகண்டா அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 255 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் மற்றும் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கலசபாக்கம் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக கலசபாக்கம் பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. மொத்த கொள்ளளவு 22.93 அடியில் தற்போது வரை 20 அடியை நீர்மட்டம் தாண்டியது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி நேற்று அதிகாலை அணையில் இருந்து வினாடிக்கு 255 கனஅடி நீர் செய்யாற்றில் திறந்து விடப்பட்டது. மேலும், காந்தப்பாளையம், நல்லான்பிள்ளைபெற்றாள், கெங்கலமகாதேவி, சிறுவள்ளூர், வில்வாரணி, எலத்தூர் ஆகிய கிராமங்களுக்கும், ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post மிருகண்டா அணையில் வினாடிக்கு 255 கனஅடி நீர் திறப்பு; கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mriganta Dam ,Kalasapakkam ,Mrigantha dam ,Thiruvannamalai District ,Mrikanda Dam ,Dinakaran ,
× RELATED கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உயர்மட்ட...