திருச்சி, ஆக.12:தற்கொலை தடுப்பை வலியுறுத்தி திருச்சியில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைவிட தற்கொலை சம்பவங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. எனவே தற்கொலை தடுப்பை வலியுறுத்தியும், மன அழுத்தத்தை மறந்து மனதில் உறுதியை நிலைநிறுத்தவும், வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்ற விழிப்புணர்வை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக திருச்சியில் 5கி.மீ விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது.
தென்னூர் ஸ்டுடன்ட்ஸ் சாலையில் தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம் வரையிலுமான நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் 17 வயதிற்குட்பட்டோர், 17வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்றோர். இருபிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். 17 வயதிற்கு மேற்பட்டோர் ஆடவர் பிரிவில் செல்வமித்ரன் முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் கீதாஞ்சலி முதலிடத்தை பிடித்தனர். 17 வயதிற்குட்பட்டோர் ஆடவர் பிரிவில் லோகேஸ்வரன், பெண்கள் பிரிவில் அனிதா முதலிடத்தைப் பிடித்தனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் மற்றும் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
The post தற்கொலை தடுப்பை வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் appeared first on Dinakaran.