×

அனைத்து மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை

சேலம், ஆக.12: சேலம் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சியில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 54,217 மனுக்கள் பெறப்பட்டு, தீர்வுகாணப்பட்டது.

தொடர்ந்து நடப்பாண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 367 கிராம ஊராட்சிகள் உள்ளடங்கிய பகுதிகளில், கடந்த மாதம் 11ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை 92 முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவுத்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 துறைகள் வாயிலாக 44 வகையான சேவைகள் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் 16 நாட்கள் நடைபெற்ற முகாம்கள் மூலம், மொத்தம் 50,431 மனுக்கள் பெறப்பட்டு, இதுநாள் வரை 6,876 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.குறிப்பாக, வருவாய் துறையின் சார்பில் 35,114 மனுக்களும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 5,167 மனுக்களும், மின்சார வாரியத்தின் சார்பில் 1,604 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1,019 மனுக்களும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 331 மனுக்களும் பெறப்பட்டுள்ளன.

அத்துடன், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப்பினர்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட இதர துறைகளின் சார்பில் என மொத்தம் 50,431 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களின் மீது, சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் விரைந்து தீர்வுகள் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post அனைத்து மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem ,Collector ,Brindadevi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் புதிதாக 7...