சேலம், ஆக.12: தமிழகத்தில் அரசு சார்பில் அனைத்து விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக, இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் பாராட்டு தெரிவித்தார். சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியின் விளையாட்டு விழா நேற்று நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது. விளையாட்டு வாழ்க்கையை கற்றுத்தரும். 10, 12ம் வகுப்புகள் மிக முக்கியமான தேர்வாக இருந்தாலும், மாணவர்கள் நம்பிக்கையோடு இருந்தால், பெற்றோர்கள் விளையாட அனுமதிப்பார்கள். தமிழகத்தில் அனைத்து விளையாட்டிற்கும் வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைத்து வருகிறது. பல மாவட்டங்களில் சிறந்த மைதானங்கள் அமைந்துள்ளன. இதனால் பல மாவட்டங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள் முன்னோக்கி வருகின்றனர்.
நல்ல வழிகாட்டுதல் இருந்தால், யார் வேண்டுமானாலும் உயர்ந்த நிலையை அடையலாம். முன்பை விட தற்போது, பல பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட அனுமதித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில், அனைத்து விளையாட்டிற்கும் நல்ல முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் அரசு சார்பில் கவுரவிக்கப்பட்டனர். இதனால், தமிழக வீரர்கள் அனைத்து விளையாட்டுகளிலும் சாதித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post அனைத்து விளையாட்டிற்கும் முக்கியத்துவம் appeared first on Dinakaran.