×

237 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை

திருச்செங்கோடு, ஆக.12: எலச்சிபாளையம் ஒன்றியத்தில், 237 பயனாளிகளுக்கு கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ஆணையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடுகட்ட ஆணைகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், நாமக்கல் எம்பி மாதேஸ்வரன், அட்மா தலைவர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு 237 பயனாளிகளுக்கு ₹8.30 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்ட ஆணைகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில், ₹3.50 லட்சம் மதிப்பில் வீடு கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், தகுதி உள்ள அனைவருக்கும் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகுதி உள்ள நபர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 3 தவணையாக தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கூடுதல் தொகை தேவைப்படுவர்களுக்கு ₹1 லட்சம் வரை வங்கியில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகுதியுள்ள பயனாளிகள் விடுபடாதவகையில் அனைவருக்கும் வீடுகட்ட ஆணை வழங்கப்பட்டு வருகிறது என்றார். விழாவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, லோகமணிகண்டன், அகரம் ஊரா்ட்சி தலைவர் லதா லட்சுமண குமார், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மாணவரணி அமைப்பாளர் பாலசுப்ரமணியம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post 237 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Minister ,Mathiventhan ,Elachipalayam ,Union ,Elachipalayam Panchayat Union ,
× RELATED ₹2.35 லட்சத்திற்கு பருத்தி விற்பனை