×

காலையில் ‘பில் டப்’ ; மாலையில் ‘கப்சிப்’ அண்ணாமலை புஸ்ஸ்ஸ்… நிர்வாகிகள் டென்ஷன்…

திருப்பூர்: திருப்பூரில் தேர்தல் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் காலையில் பேசும்போது, மாலையில் மக்களுக்கு ஒரு செய்தியை சொல்ல போகிறேன் என கூறிவிட்டு எதுவுமே சொல்லாமல் சென்றதால் நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்து முணுமுணுத்தப்படி சென்றனர்.

2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள பாஜ மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மண்டல் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் திருப்பூர் கணக்கம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மாநில நிர்வாகிகள் கேசவ விநாயகம், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், சரத்குமார், மாநிலத் துணைத் தலைவர் ராமசீனிவாசன், பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம், மகளிர் அணி செயலாளர் மலர்க்கொடி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நேற்று மாலையில் தமிழக மக்களுக்கு ஒரு செய்தியை கொடுக்க இருக்கிறோம் என காலையில் நடந்த கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். எனவே தொண்டர்களும், நிர்வாகிகளும் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் வழக்கம்போல காலையில் அண்ணாமலை கூறியதுபோல எந்த செய்தியும் வெளியாகாததால் பாஜவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பலர் டென்ஷனுடன் முணுமுணுத்தப்படி சென்றனர். கூட்டத்தில், தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம் என்ற பிரகடன அறிக்கையை அண்ணாமலை வெளியிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

‘ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை பாஜ அரசு விசாரிக்கும்’
அவிநாசியில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், ‘ஹிண்டன்பர்க் நிறுவனம் செபி தலைவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், பாஜ அரசு அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். ஹிண்டன்பர்க் நிறுவனம் இதன் மூலம் வருவாயை ஈட்டக்கூடிய பணிகளை மேற்கொண்டு வருகிறதே தவிர உண்மையை கூறுவதில்லை. அவர்கள் ஏற்கனவே கூறிய குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நம்பவில்லை என்றால் இந்தியா என்ற பெயரை கூறுவதற்கு தகுதி இல்லை. வலிமையான பாரதமாக இந்தியா உருவாகி வரக்கூடிய நிலையில் இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும். வலிமையான பாரதமாக இந்தியா உருவாகக்கூடாது என பல்வேறு சதிகள் நடக்கிறது’ என்றார்.

The post காலையில் ‘பில் டப்’ ; மாலையில் ‘கப்சிப்’ அண்ணாமலை புஸ்ஸ்ஸ்… நிர்வாகிகள் டென்ஷன்… appeared first on Dinakaran.

Tags : Bill Dub ,Kapsip ,Annamalai ,Tiruppur ,Tamil Nadu ,2026 Legislative Assembly Election ,Dinakaran ,
× RELATED சமத்துவ சமூகம் உருவாக போராடிய...