பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற 33வது ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியது. பாரிஸ் ஒலிம்பிக்கின் கடைசி நாளான நேற்று கடைசி போட்டியாக மகளிர் கூடைப்பந்து பைனல் நடைபெற்றது. அதில் அமெரிக்கா – பிரான்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டிக்கு முன் பதக்க பட்டியலில் சீனா 40 தங்கப் பதக்கத்துடன் முதலிடத்திலும், அமெரிக்கா 39 தங்கத்துடன் 2வது இடத்திலும் இருந்தன. வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை அதிகளவில் வென்றிருந்தாலும், தங்கத்தை பொறுத்தவரை 1 பதக்கம் குறைவாக இருந்ததால், அமெரிக்கா பின்தங்கியிருந்தது.
இந்த நிலையில், மகளிர் கூடைப்பந்தில் தங்கப் பதக்கம் வென்றால் அமெரிக்கா முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்ததால் அந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு ஏற்ப பிரான்ஸ் – அமெரிக்கா வீராங்கனைகள் உயிரைக் கொடுத்து விளையாடியதால் பைனலில் அனல் பறந்தது.
இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால் வெற்றி யாருக்கு என்பதில் கடும் இழுபறி நிலவியது. முதல் குவார்ட்டரில் அமெரிக்கா 15-9 என முன்னிலை பெற, 2வது கால் மணி நேர ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் 16-10 என பதிலடி கொடுத்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த 3வது மற்றும் 4வது குவார்ட்டரில் முறையே அமெரிக்கா 20-18, பிரான்ஸ் 23-22 புள்ளிகளை எடுத்தன.
மொத்தமாக 67-66 என்ற புள்ளிக் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்திய அமெரிக்கா தங்கப் பதக்கத்தை கைப்பற்ற, பதக்க பட்டியலில் 40-40 என சீனாவுடன் சமநிலை பெற்ற அமெரிக்கா முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியது. அந்த அணி 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் பதக்கங்களுடன் மொத்தம் 126 பதக்கங்களை அள்ளியது. சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் 2வது இடம் பெற்றது. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 71வது இடம் பிடித்தது.
The post பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம் appeared first on Dinakaran.