×

நிறைபுத்தரிசி பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் வறுமை நீங்கி விவசாயம் செழிப்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இவ்வருட நிறைபுத்தரிசி பூஜை இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.

தந்திரி மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்தார். நேற்று மாலை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 5.45க்கும் 6.30 மணிக்கும் இடையே நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும்.

பாலக்காடு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நெற்கதிர்கள் சிறப்பு பூஜைக்குப் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்னர் இன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு நேற்று சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

The post நிறைபுத்தரிசி பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Niraiputhari Puja ,Thiruvananthapuram ,Mass Buddha Pujas ,Sabarimala Ayyappan Temple ,Niraiputharishi Puja ,Adi ,
× RELATED சபரிமலையில் புதிய பஸ்மக்குளம் கட்ட இடைக்காலத் தடை