×

திருத்தணியில் நாளை அதிநவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்குகிறார்

திருத்தணி: திருத்தணியில் புதிதாக அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தை நாளை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் என்று நகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்தார். ஒன்றிய மற்றும் மாநில அரசுத் துறை உயர்பதவிகளுக்குப் போட்டி தேர்வு கட்டாயம் என்ற நிலையில், பல்வேறு இளைஞர்களை போட்டி தேர்வுகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில், நகர்ப்புறங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயன்பெறும் வகையில், திருத்தணி ரயில் நிலையம் அருகில் 12,840 சதுர அடி பரப்பளவில், 4500 சதுர அடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின்கீழ் ரூ.2.6 கோடி மதிப்பில் புதிதாக அதிநவீன அறிவுசார் மையம் மற்றும் நூலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது.

இப்புதிய கட்டிடத்தில் காற்றோட்டமான அறைகள், தடையின்றி மின்சாரம் வழங்க ஜெனரேட்டர், எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 12 கணினிகள் இன்டர்நெட் வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள நூலகத்தில் 140 நாற்காலிகள் அமைத்து, வாசகர்கள் வசதியுடன் அமர்ந்து படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவுசார் மற்றும் நூலகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தனித்தனி அறையில் அமர்ந்து படிக்கவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இருபாலருக்கும் தனித்தனி கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இங்கு அனைவரும் போட்டி தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி, வழிகாட்டுதல் வழங்க தேவையான கட்டமைப்பு வசதிகள் மற்றும் 1500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், திருத்தணியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தை நாளை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள், கலெக்டர், எம்பி, எம்எல்ஏக்கள், நகரமன்றத் தலைவர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்று திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் தெரிவித்தார்.

 

The post திருத்தணியில் நாளை அதிநவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Intellectual ,Centre ,Thiruthani ,Principal ,K. Stalin ,Tamil ,Nadu ,Chief Minister MLA ,Intellectual Centre ,Chennai ,Chief Secretariat ,K. ,Stalin ,Union ,State Department of State ,Trithani ,Chief MLA ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில்...