திருவாடானை: திருவாடானை அருகே சேதமடைந்த ஓட்டு கொட்டகையில் செயல்படும் அரசு பள்ளி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை அருகே அல்லிக்கோட்டை பகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு கொட்டகை கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் அல்லிக்கோட்டை, நாச்சியேந்தல் மற்றும் அணிக்கி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை காலங்களில் இப்பகுதியில் பெய்த தொடர் கனமழையால், இந்த அரசு பள்ளி செயல்படும் ஓட்டு கொட்டகை சுவர்களில் மழைநீர் இறங்கி கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் சேதமடைந்த இந்த அரசு பள்ளி கட்டிடத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மராமத்துப் பணி செய்து சீரமைத்துள்ளனர்.
ஆனால் கடந்த ஆண்டு பருவமழையின் போது இப்பகுதியில் பெய்த தொடர் கன மழையினால், அந்த பள்ளி மேற்கூரையில் உள்ள ஓடுகள் சேதமடைந்து ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஒழுகுவதால் மழை காலங்களில் மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அப்பகுதி பெற்றோர்கள் அச்சப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் தற்சமயம் இந்த பள்ளிக்கு சுமார் 10க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் வருவதாகவும், அதனால் தலைமையாசிரியர் உட்பட இரு ஆசிரியர்கள் அப்பள்ளியில் பணிபுரிந்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் இந்த சேதமடைந்த ஓட்டு கொட்டகையில் செயல்படும் அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஓட்டு கொட்டகையை அகற்றி விட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும்: அல்லிக்கோட்டை மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.