ஆம்பூர்: ஆம்பூர் அருகே சுத்திகரிக்காமல் திறந்துவிடப்பட்ட ரசாயன தோல் கழிவுநீரால் பாலாற்றில் நுரை பொங்குகிறது. மழைக்காலங்களில் தொடரும் இந்த அட்டூழியத்துக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு- ஆந்திரா எல்லைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், பாலாற்றில் தற்போது வெள்ளம் வர துவங்கி உள்ளது. இந்நிலையில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் அதிகளவில் தோல், ஷூ தொழிற்சாலைகள் உள்ளதால், மழைக்காலங்களில் சுத்திகரிப்படாத ரயான கழிவுநீரை பாலாற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து விதிமீறும் தொழிற்சாலைகளின் மின்சப்ளையை துண்டிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாணியம்பாடியை தாண்டி ஆம்பூர் தாலுகா மாராப்பட்டு பாலாற்றில் நேற்று அதிகளவில் பொங்கும் நுரையுடன் வெள்ள நீர் செல்கிறது. அதிக துர்நாற்றம் வீசும் இந்த நீரின் காரணமாக அவ்வழியாக செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பொங்கும் நுரை காற்றில் பறந்து பரவி வருவதால் அருகில் உள்ள விவசாய நிலங்கள், சாலையில் செல்வோர் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் அப்பகுதியில் நிலத்தடி நீர் விஷமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாராபட்டு, வடகரை, வடச்சேரி, மின்னூர், ஆலாங்குப்பம், சின்னபள்ளிகுப்பம், குமாரமங்கலம், வீராங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே சுத்திகரிப்படாத ரசாயன தோல் கழிவுநீரை பாலாற்றில் திறந்துவிட்ட தோல் தொழிற்சாலைகள் குறித்து ஆய்வு செய்து மழைக்காலங்களில் தொடரும் அட்டூழியத்துக்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஆம்பூர் அருகே சுத்திகரிக்காமல் திறந்துவிட்ட ரசாயன தோல் கழிவுநீரால் நுரை தள்ளிய பாலாறு appeared first on Dinakaran.