×

ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் இளம் வீரர்

மிக இளம் வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை அமன் ஷெராவத் படைத்துள்ளார். ஆண்கள் மல்யுத்தம் 57 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான மோதலில் குரூஸ் டோய் டோரியனை (போர்டோரிகோ, 29 வயது) 13-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய அமன், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6வது பதக்கத்தை வசப்படுத்தினார்.

இதன் மூலமாக, மிக இளம் வயதில் (21 வயது, 24 நாள்) ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரராக அவர் முத்திரை பதித்துள்ளார். முன்னதாக, பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து 21 வயது, ஒரு மாதம், 14 நாளில் பதக்கம் வென்றதே முந்தைய சாதனையாக இருந்தது (2016 ரியோ ஒலிம்பிக், வெள்ளி). அமன் வென்ற வெண்கலம், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 8வது பதக்கமாகும்.

* 10 மணி நேரத்தில் 4.6 கிலோ குறைப்பு
வினேஷ் போகத்தை போலவே அமன் ஷெராவத்தும் கூடுதல் எடையை குறைக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளானதும், அவர் 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்து வெண்கலப் பதக்கத்துக்கான மோதலுக்கு தயாரானதும் தெரிய வந்துள்ளது. இதற்காக, இரவு உணவை தவிர்த்து எலுமிச்சை, தேன் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே குடித்துள்ளார் அமன்.

இரவு முழுவதும் தூங்காமல் கடுமையான உடற்பயிற்சி, ட்ரெட் மில்லில் ஒரு மணி நேர இடைவிடாத ஓட்டம், வென்னீர் குளியல், மசாஜ் சிகிச்சைக்கு பிறகு லேசான ஓட்டம், டிவியில் மல்யுத்த போட்டிகளின் வீடியோக்களை பார்ப்பது என்று பயிற்சியாளர்கள், மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் எடையை குறைத்து சாதித்துள்ளார் அமன்.

The post ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் இளம் வீரர் appeared first on Dinakaran.

Tags : India ,Olympic ,Aman Sherawat ,Cruz ,Doi Dorian ,Puerto Rico ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள்...