×

பேரழிவு ஏற்பட்டு 12 நாட்களுக்கு பிறகு வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு: ரூ.2,000 கோடி நிவாரணம் வழங்க பினராயி விஜயன் கோரிக்கை, எந்தவித நிதியையும் அறிவிக்காததால் கேரள மக்கள் ஏமாற்றம்

திருவனந்தபுரம்: வயநாட்டில் பேரழிவு ஏற்பட்டு 12 நாட்களுக்கு பிறகு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேற்று ஆய்வு செய்தார். அவரிடம் ரூ.2000 கோடி நிவாரண நிதி தரும்படி முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்தார். அப்போது கேரளா தனித்து விடப்படாது, நாடே கேரளாவுக்கு துணை நிற்கும் என்று மோடி உறுதியளித்தார். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் பெரும் மழை பெய்ததால் ஜூலை 30ம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளநீர் பாய்ந்ததால் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த வீடுகளை மூடியது.

நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்த இயற்கை பேரிடர் பாதிப்பில் இதுவரை 420 பேர் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த பேரழிவால் அந்த பகுதி மக்கள் அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கிறார்கள். ஆக.1ம் தேதி அங்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டு, மீட்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

இந்த நிலையில் 12 நாட்களுக்கு பிறகு வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் மோடி நேற்று காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் கண்ணூர் வந்தார். கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் முதல்வர் பினராயி விஜயனும் உடன் சென்றார். பின்னர் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் பிரதமர் மோடி நடந்து சென்று பார்வையிட்டார்.

அந்த பகுதியில் மோடி 15 நிமிடங்கள் மட்டுமே இருப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 50 நிமிடங்களுக்கு மேல் அப்பகுதியை அவர் பார்வையிட்டார். அவருடன் கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ்கோபி, கேரள தலைமை செயலாளர் வேணு, வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகஸ்ரீ, ஏடிஜிபி அஜித்குமார் ஆகியோர் சென்றனர். பின்னர் நிலச்சரிவில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மேப்பாடி மருத்துவமனைக்கு மோடி சென்றார்.

அங்கு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு கார்மூலம் கல்பெட்டா சென்ற அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் மோடியிடம் விளக்கமாக எடுத்து கூறினார்.

தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது, “நிலச்சரிவு ஏற்பட்ட அன்று காலையிலேயே நான் முதல்வர் பினராயி விஜயனை போனில் தொடர்பு கொண்டு பேசினேன். ஒன்றிய அரசின் குழு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. மீட்பு பணிகளுக்கும் சிகிச்சைக்கும் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன. வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து அவர்களுடன் பேசி விவரங்களை அறிந்து கொண்டேன். பல குடும்பங்களின் கனவுகள் தகர்ந்து விட்டன. அவர்களின் மறுவாழ்வுதான் இப்போது முக்கியம்.

இயற்கை பேரிடர்களை தடுக்க முடியாது. ஆனால் அதில் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலம் நம் பொறுப்பாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசு துணை நிற்கும். பாதிப்பு குறித்து அனைத்து விவரங்களை ஒன்றிய அரசிடம் அளிப்பதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா தனித்து விடப்படாது. நாடே கேரளாவுக்கு துணை நிற்கும். கேரள அரசின் நஷ்டம் குறித்த கோரிக்கை கிடைத்த உடன் அமைச்சரவை கூடி உரிய இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட மக்கள் மறு வாழ்வுக்கு பணம் ஒரு தடையாக இருக்காது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், “பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வுக்கு அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்ய வேண்டும். காலநிலை மாற்றம் குறித்து உடனுக்குடன் அறிவதற்கான தொழில்நுட்ப வசதியை கேரளாவுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்” என்று கேட்டு கொண்டார். இதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட மோடி கண்ணூர் சென்றார். அங்கிருந்து மாலை 6 மணியளவில் டெல்லி புறப்பட்டார்.

* உக்ரைன் போரை நிறுத்த செல்லும் முன்பு மணிப்பூருக்கு செல்ல வேண்டும்: காங்கிரஸ்
பிரதமர் மோடியின் வயநாடு பயணம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில்,’ உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமர் மோடி வயநாட்டில் இருப்பது நல்லது. இது ஒரு பேரழிவு தரும் சோகம். இதற்குப் பிறகு, அவர் மீண்டும் உக்ரைனுக்குச் சென்று போரை நிறுத்த திட்டமிட்டுள்ளார். 15 மாதங்களுக்கும் மேலாக மிகுந்த வலி, வேதனை மற்றும் வேதனையை அனுபவித்து வரும் மணிப்பூருக்குச் செல்வதற்கான நேரத்தையும், விருப்பத்தையும் அவர் கண்டுபிடிப்பார் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
கேரளாவில் நான்கு நாட்களுக்கு மீண்டும் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், நாளை பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய மாவட்டங்களிலும், 13ம் தேதி பத்தனம்திட்டா, மலப்புரம், இடுக்கி மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும், நாளை கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களிலும், 13ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் உள்பட 7 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 14ம் தேதி ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, திருவனந்தபுரம் உள்பட 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* கேரள மாநிலம் வயநாட்டில் திடீரென பெய்த பெருமழையால் ஜூலை 30ல் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

* நிலச்சரிவில் 420 பேர் பலியானார்கள். 130 பேர் மாயமாகி விட்டனர்.

* ஆக.1ல் வயநாடு சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சேதங்களை பார்வையிட்டார்.

* சூஜிப்பாறையில் இருந்து 3 உடல்கள் மீட்பு
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று மதியம் வரை உள்ளூர் மக்களின் உதவியுடன் தேடுதல் பணிகள் நடத்தப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 20 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சூஜிப்பாறை அருவிக்கு அருகே உள்ள பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களாக உடல்களை தேடும் பணி நடைபெற்றது.

மிகவும் கடினமான, யாராலும் எளிதில் செல்ல முடியாத இந்தப் பகுதியில் இருந்து சில உடல்கள் மீட்கப்பட்டன. ராணுவம், கேரள போலீசின் சிறப்புப்படை, வனத்துறையினர் ஆகியோர் ஹெலிகாப்டரில் சென்று உடல்களைத் தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் இங்கிருந்து 3 உடல்கள், ஒரு உடல் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவற்றை கொண்டுவர முடியவில்லை. இந்தநிலையில் மீட்புக் குழுவினர் நேற்று காலை ஹெலிகாப்டரில் சூஜிப்பாறைக்கு சென்று 3 உடல்களை மீட்டு கொண்டு வந்தனர்.

The post பேரழிவு ஏற்பட்டு 12 நாட்களுக்கு பிறகு வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு: ரூ.2,000 கோடி நிவாரணம் வழங்க பினராயி விஜயன் கோரிக்கை, எந்தவித நிதியையும் அறிவிக்காததால் கேரள மக்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Wayanad ,Pinarayi Vijayan ,Kerala ,Thiruvananthapuram ,Modi ,Chief Minister ,Vayanat ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!