திண்டுக்கல் : கொடைக்கானலில் விடுதி அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த 2 இளைஞர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடைக்கானல் சுற்றுலா சென்ற திருச்சியைச் சேர்ந்த ஜெயகண்டன் , சிவ சங்கர், சிவ ராஜ், சென்னையைச் சேர்ந்த ஆனந்த் பாபு ஆகியோர் வில்பட்டி அருகே தனியார் விடுதியில் 2 அறைகளில் தங்கி இருந்தனர். திருச்சியில் இருந்து வாங்கி வந்த பார்பிக்யூ அடுப்பில் மரக்கறியை பயன்படுத்தி நெருப்பு மூட்டிய அவர்கள், அதில் சிக்கனை சுட்டு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மதுவும் அருந்துவிட்டு அவரவர் அறைகளில் தூங்கியதாக தெரிகிறது. காலையில் எழுந்து பார்த்த போது, பக்கத்து அறையில் இருந்த ஜெயகண்டன், ஆனந்தபாபு ஆகியோர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடைத்ததை கண்டு மற்ற இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களில் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், ஜெயகண்டனையும் பாபுவையும் சோதித்து பார்த்து இறந்துவிட்டதாக கூறிச் சென்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இரவில் பார்பிக்கியூ அடுப்பை அணைக்காமல், போதையில் படுத்து உறங்கிய போது, புகை மூட்டத்தில் மூச்சு திணறி, உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. மேலும் மதுவோ அல்லது கேட்டுப்போன சிக்கனோ உயிரிழப்புக்கு காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறு ஆய்விற்கு பின்னர், முழுமையான தகவல் தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
The post கொடைக்கானல் விடுதி அறையில் 2 இளைஞர்கள் மர்ம மரணம் : பார்பிக்கியூ அடுப்பை அணைக்காமல் உறங்கியதால் மூச்சுத்திணறி பலியா? appeared first on Dinakaran.