×

தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 4715 மாணவர்களுக்கு ஏடிஎம் கார்டு

*அமைச்சர்கள் வழங்கினர்

பல்லடம் : திருப்பூர் மாவட்டத்தில் 4715 மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி ஏடிஎம் கார்டுகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று வழங்கினர்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடந்து, திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் அவினாசிபாளையம் ஜெய் ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் தமிழ்ப் புதல்வன் திட்டம் துவங்கியது. இதில், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் 4715 மாணவர்களுக்கு வங்கி ஏடிஎம் கார்டுகளை வழங்கினர். இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் நடமாடும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி ரூ.1000த்தை எடுத்து சென்றனர்.

இவ்விழாவில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம்” (புதுமைப்பெண் திட்டம்) பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டதில் கூடுதலாக உதவி பெறலாம்.

இத்திட்டத்தின் நோக்கம் பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின் படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர்கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்க செய்தல், பெண்களுக்கான தொழிற் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யும், இத்திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் 5.09.2022 அன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் 10,422 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல், அரசு பள்ளிகளில் பயின்ற, ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தை கோவை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

“தமிழ்ப்புதல்வன்” என்னும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்தும் போது மாணவர்கள் கல்லூரியில் அதிக அளவில் சேர்வார்கள். இது சேர்க்கை விகிதம் அதிகமாவதற்கு வழிவகை செய்யும். அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தினை அதிகப்படுத்தும், மாணவர்கள் பாட புத்தகங்கள், பொதுஅறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி கல்வியை மெறுகேற்றிட உதவும்.

இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்கால தூண்களாக திகழ்வார்கள். கல்வி இடை நிற்றலை தடுக்க முடியும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பெறும் மாணவர்கள் இத்திட்டத்தில் கலை மற்றும் அறிவியல் பிரிவு, பொறியியல் பிரிவு, மருத்துவ படிப்பு, சட்டம் சார்ந்த படிப்புகள், ஒருங்கிணைந்த பாட பிரிவு, இத்திட்டத்தில் கீழ் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம். இந்த மாணவர்கள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டதில் கூடுதலாக உதவி பெறலாம். முதல் கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் 43 கல்லூரிகளில் 4715 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இந்நிகழ்வில் திருப்பூர் சார் ஆட்சியர் சௌம்யா ஆனந்த், திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் குமார், மாவட்ட சமூகநல அலுவலர் ரஞ்சிதா தேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்கா பிரசாந், ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி தாளாளர் கோவிந்தசாமி, ஒன்றிய திமுக செயலாளர்கள் பாலுசாமி,
அசோகன் (பொங்கலூர்), சோமசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி (பல்லடம்), பல்லடம் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அக்ரோ சீனிவாசன், திமுக நிர்வாகிகள் ஊகயனூர் கனகராஜ், லோகுபிரசாத், லதா வெங்கிடாசலபதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 4715 மாணவர்களுக்கு ஏடிஎம் கார்டு appeared first on Dinakaran.

Tags : Ministers ,Palladam ,MU ,Saminathan ,N.Kayalvizhi Selvaraj ,Tirupur district ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே நீர் நிலையை...