×

கார் பருவ சாகுபடி தேவையை ஈடுகட்ட 2853 டன் டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் வருகை

*ரயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது

நெல்லை : கார் பருவ சாகுபடி தேவைகளை ஈடுகட்டும் வகையில் 5 மாவட்டங்களுக்கு தேவையான 2853 டன் உரம் நேற்று குஜராத்தில் இருந்து கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. வேளாண் துறை அதிகாரிகள் அவற்றை பிரித்து மாவட்ட வாரியாக அனுப்பி வைத்தனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தற்போது கார் சாகுபடி களை கட்டியுள்ளது. அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளதால், விவசாயிகள் கார் நெல் சாகுபடியை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் கார் பருவ நெல் சாகுபடிக்கான நாற்று நடும் பணிகள் நிறைவடைந்த நிலையில், பயிர் வளர்ச்சிக்கு தேவையான உரங்களை கூட்டுறவு வேளாண் சங்கங்களில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி தரமான உரம் விநியோகம் செய்திட வேளாண் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து நேற்று ஒரு சரக்கு ரயில் மூலம் 2853 டன் டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள், கங்கைகொண்டான் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. நெல்லை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) சந்திரபோஸ் மற்றும் இப்கோ நிறுவன அலுவலர் சக்திவேல் ஆகியோர் உர மூடைகளை ஆய்வு செய்து 5 தென் மாவட்டங்களுக்கு விவசாயிகளின் தேவைக்கேற்ப பிரித்து அனுப்பி வைத்தனர்.

நெல்லை மாவட்டத்திற்கு 554 டன் உரம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 1311 டன், தென்காசி மாவட்டத்திற்கு 860 டன், மதுரை மாவட்டத்திற்கு 22 டன், விருதுநகர் மாவட்டத்திற்கு 101 டன் உரங்கள் பிரித்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவனத்திலிருந்து சாலை மார்க்கமாக 170 டன் யூரியா, நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி, அயன்சிங்கம்பட்டி, அரிகேசவநல்லூர், சீதபற்பநல்லூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் உரம் விற்பனையை கண்காணித்திட அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுபாடின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையில் உரங்களை வாங்கி பயன் பெற வேண்டும் என நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post கார் பருவ சாகுபடி தேவையை ஈடுகட்ட 2853 டன் டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் வருகை appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Gangaikondan Railway Station ,Department of Agriculture ,Dinakaran ,
× RELATED பருவமழைக் காலங்களில் மழைநீரை சரியான...