×

சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பிறந்து ஐந்து நாள்களே ஆன ஆண் குழந்தை 15 மணி நேரத்திற்குள் மீட்பு!!

சேலம் : சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பிறந்து ஐந்து நாள்களே ஆன ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவருக்கு திருமணமாகி வெண்ணிலா (25) என்ற மனைவியும் 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக வெண்ணிலா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான வெண்ணிலாவுக்கு கடந்த 5ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வெண்ணிலாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் அன்றைய தினமே ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரை அறுவை சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். வெண்ணிலாவிற்கு உதவியாக மருத்துவமனையில் அவரது தாய் இந்திரா இருந்தார்.

இந்நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வெண்ணிலா சிகிச்சை பெற்று வந்த வார்டில் தங்கி இருந்தார்.இவர் தனது உறவினர் இங்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறி அறிமுகம் ஆகி உள்ளார். இதையடுத்து வெண்ணிலா மற்றும் அவரது தாய் இந்திரா ஆகியோர் அவரிடம் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இந்திராவிடம் பிறந்த குழந்தையின் கண்கள் மஞ்சளாக உள்ளது. எனக்கு தெரிந்த கண் டாக்டர் மருத்துவமனையில் உள்ளார். அவரிடம் காண்பித்தால் சரிசெய்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.இதை உண்மை என நம்பிய வெண்ணிலாவின் தாய் குழந்தையை தூக்கிக்கொண்டு புதிதாக அறிமுகமான பெண்ணுடன் கண் மருத்துவ பிரிவிற்கு சென்றுள்ளனர். அங்கு கண் மருத்துவ துறையில் டாக்டர்களிடம் காண்பித்து விட்டு, குழந்தையை பெண் வாங்கி வைத்துள்ளார். மருந்து சீட்டை கொடுத்து நீங்கள் மாத்திரை வாங்கி வாருங்கள் நான் இங்கேயே இருக்கிறேன் என்று இந்திராவிடம் கூறியுள்ளார். இதையடுத்து மாத்திரை வாங்கிய பிறகு வந்து பார்த்த போது குழந்தையுடன் அப்பெண்ணை காணவில்லை.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஜி.ஹெச் புறக்காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பச்சை நிற புடவை அணிந்த பெண் ஒருவர் மாஸ்க் அணிந்துகொண்டு குழந்தையை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர்.இந்த நிலையில், வாழப்பாடியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி தீவிர விசாரணையில் ஈடுபட்ட சேலம் மாநகர போலீஸார், காரிப்பட்டியைச் சேர்ந்த பெண் வினோதினியை கைது செய்து, அவரிடம் இருந்த ஆண் குழந்தையை பத்திரமாக மீட்டு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.மேலும் குழந்தையை கடத்திய வினோதினியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குழந்தை கடத்தப்பட்ட 15 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சேலம் மாநகர போலீஸாருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பிறந்து ஐந்து நாள்களே ஆன ஆண் குழந்தை 15 மணி நேரத்திற்குள் மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : Salem Government Hospital ,Salem ,Thangadurai ,Namakkal ,Vanilla ,
× RELATED சேலம் அரசு மருத்துவமனையில் ஓராண்டில்...