செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதால் போலீசாரும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செங்கல்பட்டு நகரில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமானது முதல் பலத்த சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், கனமழையின் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய மழைநீரானது செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தை சூழ்ந்துள்ளது.
இதனால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்று நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் அவலநிலையில் காணப்படுகிறது. மழைநீர் வெளியேற வழியில்லாததால் கடந்த 4 நாட்களாக மழைநீர் வெள்ளம் காவல் நிலையத்தை சூழ்ந்துள்ளது. இதனால், காவல் பணிக்கு செல்லும் போலீசாரும், புகார் அளிக்க வரும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தை சூழ்ந்துள்ள மழைநீர் வெள்ளத்தை மின்மோட்டர் உதவியுடன் உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், மண்ணை கொட்டி சமன் செய்து மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
The post தாலுகா காவல் நிலையத்தை சூழ்ந்த மழைநீர்: போலீசார், பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.