பள்ளிகொண்டா, ஆக.10: பைப் லைன் அமைக்க தோண்டிய பள்ளத்தில் லாரி சிக்கி சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிகொண்டா பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் ₹30.90 கோடி மதிப்பீட்டில் ‘அம்ருத்’ குடிநீர் திட்டப்பணிகளின் கீழ் பாலாற்று நீர் சப்ளை செய்யும் பொருட்டு, குடி நீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கள் மற்றும் பைப்லைன் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது, பாலாற்றில் இருந்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு செல்லும் குடிநீர் மெயின் பைப்லைன் அமைப்பற்கான பணிகள் குடியாத்தம் சாலையில் நடந்து வருகிறது.
அதேபோல் பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் கடந்த 10 நாட்களாக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், தினமும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உட்பட இருசக்கர வாகனங்களும் செல்ல வழியின்றி வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிக்கி தவித்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் ஆந்திராவில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு மூக்கடலை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பள்ளிகொண்டா குடியாத்தம் சாலை வழியாக சென்றது. அப்போது பைப் லைன் அமைக்க தோண்டிய பள்ளத்தில் லாரியின் இடது பக்க சக்கரம் முழுவதும் திடீரென இறங்கி விபத்துக்குள்ளாகி ஒருபுறமாக சாய்ந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு கிரேன் மூலம் கனரக லாரியை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. லாரியில் சரக்கு மூட்டைகளை அதிக எடை இருந்ததால் மீட்க முடியவில்லை. அதனை தொடர்ந்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு இரண்டு கிரேன்கள் உதவியுடன் மீட்கும் பணி நடந்தது.
இதனிடையே காலை நேரத்தில் அலுவலக பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு சென்ற வாகனங்கள் என அனைத்து தரப்பினரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து திக்கு முக்காடினர். மாலை 5 மணி வரையிலும் கனரக லாரியை மீட்க முடியாத நிலையில், லாரியின் உரிமையாளர் மாற்று லாரியினை கொண்டு வந்து பள்ளத்தில் சிக்கிய லாரியில் இருந்த மூக்கடலை மூட்டைகளை அதற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கிரேன்கள் மூலம் பள்ளத்தில் சிக்கிய கனரக லாரியினை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
The post பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் பைப் லைன் அமைக்க தோண்டிய பள்ளத்தில் சிக்கி சாய்ந்த லாரி appeared first on Dinakaran.