×

காட்பாடியில் துணி வியாபாரம் செய்யும் பெண்ணிடம் இரட்டிப்பாக பணம் தருவதாக ₹55.55 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது

வேலூர், ஆக.10: காட்பாடியில் துணி வியாபாரம் செய்யும் பெண்ணிடம் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ₹55.55 லட்சம் மோசடி செய்த தம்பதியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் துணி வியாபாரமும், மாத சீட்டும் நடத்தி வருகிறார். இவரும் வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம் பூண்டி மேட்டு தெருவை சேர்ந்த உமாவும் நெருங்கிய நண்பர்கள். இதற்கிடையில் உமாவும், அவரது கணவர் பாலுவும் காட்பாடி தாராபடவேடு பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தனர். இந்நிலையில் ரயில் நிலைய கான்ட்ராக்ட் எடுக்க உள்ளதாகவும், பெங்களூரில் புதிய ஓட்டல் ஆரம்பிக்க உள்ளதாகவும் மகாலட்சுமியிடம் தம்பதி கூறியுள்ளனர்.

மேலும் அதற்கு பணம் தேவைப்படுவதால், கொடுக்கும் பணத்தை இரண்டு மடங்காக திருப்பி கொடுப்பதாக கூறியுள்ளார். இதை நம்பி மகாலட்சுமி கடந்த 2022ம் ஆண்டு பணத்தை கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் நடத்தி வந்த மாத சீட்டிலும் பணத்தை எடுத்துள்ளார். மொத்தம் ₹55 லட்சத்து 55 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். மகாலட்சுமி பணம் கேட்டால் அவரை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி இதுகுறித்து வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் எஸ்பி மணிவண்ணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான போலீசார் தம்பதி உமா(39), பாலு (41) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் நேற்று காட்பாடியில் கைது செய்தனர்.

The post காட்பாடியில் துணி வியாபாரம் செய்யும் பெண்ணிடம் இரட்டிப்பாக பணம் தருவதாக ₹55.55 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது appeared first on Dinakaran.

Tags : Katpadi ,Vellore ,Mahalakshmi ,Katpadi Tarapadavedu ,Vellore district ,
× RELATED மாணவிகளின் உள்ளாடைகளை திருடும் மர்ம...