ஆரணி, ஆக.10: திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஆரணியில் 72 மி.மீ. மழை பதிவானது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே காலை முதல் மாலை வரை கோடை வெயிலை காட்டிலும், வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேசமயம், மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி, ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை லேசான காற்றுடன் தொடங்கிய மழை, நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்கள், நீர்நிலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. ஆரணி பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் நீர்நிலைகள் நிரம்பியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழையின் அளவு: திருவண்ணாமலை 4 மி.மீ, செங்கம் 12.8 மி.மீ, போளூர் 50 மி.மீ, ஆரணி 72 மி.மீ, ஜமுனாமரத்தூர் 51.8 மி.மீ, கலசபாக்கம் 55 மி.மீ, தண்ராம்பட்டு 6.4 மி.மீ, செய்யாறு 42 மி.மீ, வந்தவாசி 41 மி.மீ, கீழ்பென்னாத்தூர் 19 மி.மீ, வெம்பாக்கம் 24 மி.மீ, சேத்துப்பட்டு 45.4 மிமீ. மாவட்டம் முழுவதும் மழையின் அளவு 423.4 மி.மீ. பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஆரணியில் 72 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. இந்நிலையில், நேற்று இரவும் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை அதிகபட்சமாக ஆரணியில் 72 மி.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.