திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு 6 ஆம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பட்டறைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி கூட்டரங்கில் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், எஸ்.சுதர்சனம், துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், கோட்டாட்சியர் ஏ.கற்பகம், சமூக நலத்துறை அலுவலர் வாசுகி, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி, வட்டாட்சியர் செ.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூரில் நமது முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 6,681 எண்ணிக்கையிலான மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இம்மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் அவரவர் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என்றார்.
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்விற்கு டிஜெஎஸ் கல்வி குழும இயக்குனர்கள் டி.ஜெ.டி.தினேஷ், டி.ஜெ.எஸ். தமிழரசன், டிஜெஎஸ் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனர் வெற்றி ராஜேஷ் முன்னிலை வகித்தனர்.மேலும், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், பொன்னேரி நகராட்சி தலைவர் பரிமளம் விஸ்வநாதன், டிஜெஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் லட்சுமிபதி வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, டி.ஜெ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த 220 மாணவர்கள், டி.ஜெ.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்ந்த 28 மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணைகளையும், வங்கி டெபிட் கார்டுகளையும் வழங்கினார். இந்த நிகழ்வில் பொன்னேரி நகர திமுக செயலாளர் ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், மெய்யழகன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
The post மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்: 6,681 பேர் பயனடைவர் appeared first on Dinakaran.