பெரம்பூர்: கொடுங்கையூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் ஷர்மிலி (40). இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற நிலையில், தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், ஷர்மிலி தனது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக, தனக்கு அறிமுகமான புளியந்தோப்பு வ.உ.சி நகரை சேர்ந்த காவியா ராணி (25) என்பவரை சந்தித்து பேசியுள்ளார். அவர், தனக்கு தெரிந்த நபர் மூலம், உனது மகளுக்கு பிரபல கல்லூரியில் சீட்டு வாங்கி தருகிறேன். அதற்கு கமிஷனாக ரூ.1.30 லட்சம் கொடுக்க வேண்டும், என கூறியுள்ளார்.
இறுதியாக, ரூ.1.15 லட்சம் தருவதாக ஷர்மிலி சம்மதித்து, அந்த தொகையை காவியா ராணியிடம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் கொடுத்துள்ளார். ஆனால், கல்லூரியில் சீட்டு வாங்கி தராமல், காவியா ராணி ஏமாற்றி வந்துள்ளார். இதனால், ஷர்மிலி பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தையும் திருப்பி தராமல் காவியா ராணி ஏமாற்றி வந்துள்ளார் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி நேற்று காவியா ராணியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.1.15 லட்சம் மோசடி: பெண் கைது appeared first on Dinakaran.