- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- சட்டமன்ற உறுப்பினர்
- தண்டாயர்பேட்டை
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- தின மலர்
தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கடந்த அதிமுக ஆட்சியிர் ரூ.136 கோடி மதிப்பீட்டில் 11 மாடி கொண்ட 1044 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கியது. ஆனால், முறையான அனுமதி பெறாததால், பாதியிலேயே பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், இந்த குடியிருப்பு கட்டுமான பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும், என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் முயற்சியில் சிஎம்டிஏ, சுற்றுச்சூழல், மின்வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட அனுமதிகளை பெற்று, இந்த குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது தயார் நிலையில் உள்ளது. இதனை, அங்குள்ள மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்தது.
ஒவ்வொரு குடியிருப்புக்கும் ரூ.4.5 லட்சம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் அவ்வளவு பணம் செலுத்த முடியாது என்று கூறினர். இதையடுத்து, ரூ.3 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு, ஒவ்வொரு குடியிருப்புக்கும் ரூ.1.5 லட்சம் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதற்கட்டமாக 227 வீடுகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு தற்காலிக ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ பங்கேற்று, 227 பேருக்கு தற்காலிக குடியிருப்பு ஆணை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன், ராயபுரம் பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி, வட்ட செயலாளர் கவுரீஸ்வரன், பொதுமக்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
The post நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 227 பேருக்கு ஒதுக்கீடு ஆணை: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.