தாம்பரம்: தாம்பரம் அருகே சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பியூட்டி பார்லர் ஊழியர் மற்றும் டியூஷன் சென்டர் உரிமையாளர் ஆகிய 2 பேரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்தவர் 46 வயது பெண். இவரது 17 வயது மகள், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ பொலிடிக்கல் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த சிறுமி, மாடம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள நேச்சுரல் பியூட்டி பார்லரில் முடி வெட்டுவதற்கு சென்றுள்ளார்.அப்போது அந்த சலூனில் வேலை செய்தவர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அங்கிருந்து வீடு திரும்பிய சிறுமி, இதுபற்றி தனது தாயிடம் கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், இதுகுறித்து சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அந்த சலூனில் வேலை செய்து வந்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது முஸ்தபா (26) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல், பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த 34 வயது பெண் ஒருவரின் 9வயது மகள், விரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்த சிறுமி, பள்ளிக்கரணை, மனோகர் நகர் பகுதியில் உள்ள 2ஏ கிண்டர் கார்டன் என்ற டியூஷன் சென்டரில் தினமும் டியூஷன் சென்று படித்து வந்தாள். அப்போது, டியூஷன் சென்டர் உரிமையாளர் சிறுமியை மடியில் உட்கார வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது தாயாரிடம் தெரிவித்ததை அடுத்து, அவரது தாயார் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த டியூஷன் சென்டரின் உரிமையாளர் மணிகண்டன் (29) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; டியூஷன் சென்டர் உரிமையாளர் பியூட்டி பார்லர் ஊழியர் கைது appeared first on Dinakaran.