பெரம்பூர்: பெரம்பூரில் கடந்த மாதம் 5ம்தேதி ஒரு கும்பலால் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை கொண்டு வந்தனர். 2 நாட்டு வெடிகுண்டுகளும் கொண்டு வந்துள்ளனர். கத்தியால் வெட்டி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய முடியாமல் போனால் நாட்டு வெடிகுண்டுகளை வீசி அதன்பிறகு வெட்டலாம் என நினைத்து நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கத்தியால் வெட்டப்பட்டு ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். கொலை செய்துவிட்டு தப்பிய கும்பல், 2 நாட்டு வெடிகுண்டுகளை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். 2 நாட்டு வெடிகுண்டுகளையும் போலீசார் கைப்பற்றினர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஒன்றன்பின் ஒன்றாக கைது செய்து விசாரணை நடத்திபோது மேலும் 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட 5 நாட்டு வெடிகுண்டுகளையும் அப்புறப்படுத்த போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில் இன்று காலை 10 மணியிலிருந்து 10.45 மணி வரை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 5 நாட்டு வெடிகுண்டுகளையும் சென்னை பெருநகர 5வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஜெகதீசன் உத்தரவின்பேரில், செயலிழக்க வைக்கும் பணி நடைபெற்றது. செம்பியம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் சிரஞ்சீவி முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. இதையடுத்து கொடுங்கையூர் குப்பை கிடங்கின் உட்பகுதியில் ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் துறை ஆய்வாளர் முத்துமணி தலைமையில் 5 நாட்டு வெடிகுண்டுகளும் செயலிழக்க வைக்கப்பட்டது. கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான குற்றவாளிகளிடமிருந்து: பறிமுதல் செய்த 5 நாட்டு வெடிகுண்டு கொடுங்கையூர் குப்பை கிடங்கில் அழிப்பு appeared first on Dinakaran.