டெல்லி: மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் – சமாஜ்வாதி உறுப்பினர் ஜெயா பச்சன் இடையே கடும் வாக்குவாதத்தால் அமளி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய அவை நடவடிக்கையின்போது, எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை, ஆளும் கட்சியினர் அவரை தவறான முறையில் பேசுகின்றனர். அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கார்கே பேசும் போது மைக் ஆன் செய்யப்படாததால் ஜெயா பச்சன் வாக்குவாதம் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
ஜெகதீப் தங்கர் – ஜெயா பச்சன் கடும் வாக்குவாதம்
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் – சமாஜ்வாதி உறுப்பினர் ஜெயா பச்சன் இடையே கடும் வாக்குவாதத்தால் அமளி ஏற்பட்டது. மாநிலங்களவை தலைவரின் உடல்மொழி, பேசும் தொனியை தம்மால் புரிந்து கொள்ள முடியும். பேசக்கூடாத வார்த்தைகளை அவைத்தலைவர் பேசியதாக சமாஜ்வாதி எம்.பி. ஜெயா பச்சன் கூறினார்.
ஜெகதீப் தங்கரின் அதிகார தொனி ஏற்கத்தக்கதல்ல: ஜெயா பச்சன்
அவைத்தலைவர் ஜெகதீப் தங்கரின் அதிகார தொனி ஏற்கத்தக்கதல்ல என்றும் ஜெயா பச்சன் விமர்சித்தார். உறுப்பினர்கள் அனைவரும் சகாக்களே; ஒரே வேறுபாடு தாங்கள் அவைத்தலைவர் இருக்கையில் இருப்பது மட்டுமே. மாநிலங்களவையில் “நான் ஜெயா அமிதாப் பச்சன் பேசுகிறேன்” என்றே ஜெயா பச்சன் தொடங்கினார். ஜெயாவை 2 நாளுக்கு முன் அவைத்தலைவர் பேச அழைத்தபோது ஜெயா அமிதாப் பச்சன் என கூறியதற்கு பதிலடியாக ஜெயா பேசினார்.
பள்ளியில் நடப்பதுபோல மாநிலங்களவை ஜெயா பச்சன்
பள்ளிக்கூடத்தில் நடப்பது போல மாநிலங்களவையை நடத்துவதாகவும் ஜெயா பச்சன் கடுமையாக விமர்சித்தார். ஜெயா பச்சனின் பேச்சில் குறுக்கிட்ட ஜெகதீப் தங்கர், அவரை இருக்கையில் அமருமாறு உத்தரவிட்டார்.
ஜெகதீப் தங்கர் பேச்சு
ஜெயா பச்சன் பிரபலமானவராக இருக்கலாம்; ஆனால் அவையின் ஒழுங்குமுறைகளை புரிந்துகொள்ள வேண்டும். எப்படி கையாள வேண்டும் என்பது தனக்கு தெரியும். ஜெயா பச்சன் பெரும் புகழை பெற்றிருக்கிறார்; ஆனால் இயக்குநர் சொல்வது போல்தான் நடிக்க வேண்டும் என்றார் ஜெகதீப் தங்கர். எனது இருக்கையில் இருந்து நான் பார்ப்பதை நீங்கள் பார்க்க முடியாது என்று ஜெயா பச்சனை பார்த்து கூறினார். தினமும் பள்ளியை போல நடத்திக்கொண்டு இருக்க முடியாது என்றும் தான் நீக்குப் போக்காக நடந்து கொள்வதாகவும் தங்கர் விளக்கம் அளித்தார்.
இதை தொடர்ந்து, ஜெயா பச்சன், ஜக்தீப் தன்கர் இடையே வார்த்தை மோதல் முற்றியதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.ஜெயா பச்சனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய நிலையில் ஜக்தீப் தன்கர் வெளியேறினார். பின்னர், நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை முன்கூட்டியே இன்றோடு ஒத்திவைக்கப்பட்டது. திங்கள்கிழமையோடு நிறைவுபெற இருந்த அவைகள் ஒருநாள் முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு அவைக்கு திரும்பாத நிலையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
சமாஜவாதி எம்.பி. ஜெயா பச்சன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
வெளியே வந்த எம்.பி. ஜெயா பச்சன் பேசுகையில், ‘எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது மைக் அணைக்கப்படுகிறது. பெண் எம்.பி.க்களுக்கு மரியாதை வழங்கப்படவில்லை. இதற்கு அவைத் தலைவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.
நேற்று வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்க மறுத்ததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை வெளிநடப்பு செய்தனர். அவையில் தனக்கு போதிய ஆதரவு இல்லை என்று கூறி அவைத் தலைவர் ஜகதீப் தன்கரும் சிறிது நேரம் அவையில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
The post மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் – சமாஜ்வாதி உறுப்பினர் ஜெயா பச்சன் இடையே கடும் வாக்குவாதத்தால் அமளி..!! appeared first on Dinakaran.