கூடலூர்: கூடலூரில் வீடுகள், நடைபாதையில் ஏற்பட்ட விரிசல் குறித்து நேற்று 2வது நாளாக மத்திய புவியியல் ஆய்வு மைய நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புகள் இல்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி 21வது வார்டுக்குட்பட்ட கோக்கால் ஒன்றரை சென்ட் காலனி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுகள், காப்பகம், நடைபாதைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. திடீரென தரையில் பிளவுகள் ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்ததால் இப்பகுதியில் கேரளாவைபோல் நிலச்சரிவு ஏற்படுமோ? என்ற பீதி மக்களிடையே எழுந்தது. இப்பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், விரிசலுக்கான காரணத்தை கண்டறிந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி இந்த பகுதிக்கு நேற்று முன்தினம் மத்திய புவியியல் ஆராய்ச்சி மைய நிபுணர் யுன் யெலோ டெப் தலைமையில் புவியியலாளர்கள் அசோக் பங்கஜ், விவேக் குமார் சிங் ஆகியோர் வந்தனர். அவர்கள் விரிசல் ஏற்பட்ட வீடுகள், நடைபாதை பகுதிகளில் ஆய்வு செய்தனர். நேற்று 2வது நாளாக அவர்களது ஆய்வு நடந்தது. நேற்று அவர்கள் மருத்துவமனையில் புதிய கட்டிட பணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு சென்றனர். அங்கு நவீன கருவிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு குறித்து புவியியலாளர்கள் கூறியதாவது: மண்ணுக்கு அடியில் உள்ள நீரோட்டங்கள், அதன் தன்மைகள் குறித்து நவீன கருவி மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்பகுதிக்கு அடியில் உள்ள பாறைகளுக்கும், மண்ணுக்கும் இடையே உள்ள நீரோட்டத்தில் மழைக் காலங்களில் அதிக நீரோட்டம் காரணமாக ஏற்படும் அழுத்தத்தால் மண்ணரிப்பு ஏற்பட்டு அப்பகுதியில் மண் சற்று லேசாக கீழ் நோக்கி சென்று இந்த நிலப்பிளவுகள் ஏற்பட்டிருக்கலாம். குடியிருப்புகளுக்கு கீழ்பகுதியில் பெரிய அளவில் மண் எடுக்கப்பட்டதுதான் இதற்கு காரணமா? என்பது குறித்து அறியும் வகையில் மண்ணுக்கு அடியில் கீழ் பாகத்தில் உள்ள நிலையை கண்டறிய டிஜிபிஎஸ் எனப்படும் நவீன கருவி மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. பாதிக்கப்பட்ட சுமார் 7 வீடுகளுக்கு மேல் பகுதியில் உள்ள ஏராளமான குடியிருப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் சில நாட்கள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது.இவ்வாறு புவியியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
The post நிலப்பிளவுக்கு காரணம் கண்டுபிடிப்பு; கூடலூரில் நிலச்சரிவு அபாயம் இல்லை: புவியியலாளர்கள் தகவல்; மக்கள் நிம்மதி appeared first on Dinakaran.