- யூனியன் அரசு
- ஸ்ரீலங்கான் ஊராட்சி
- Mutharasan
- சென்னை
- மாநில செயலாளர்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: இலங்கை அரசு கைது செய்துள்ள மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்கள் 32 பேரை மறுபடியும் இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. நான்கு நாட்டுப் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கிறது.முன்பு மீன்பிடி விசைப்படகுகளை வழி மறித்து பறிமுதல் செய்து, மீனவர்களை கைது செய்து வந்த இலங்கை கப்பற்படை, இப்போது நாட்டுப்புற படகுகளையும் பறிமுதல் செய்ய தொடங்கியிருக்கிறது.
ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சுமார் 200 விசைப்படகுகள் மீட்கப்படாமல், இலங்கை கடற்கரைகளில் சேதம் அடைந்து அழிந்து கொண்டிருக்கின்றன. 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கைச் சிறையில் வாடுகின்றனர். இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், இந்திய கப்பற்படை, கடலோர காவல் படை ஆகியவையும் இருக்கின்றன. அவை ஏன் இந்திய மீனவர்களை பாதுகாக்க தவறுகின்றன என்பது வெளிப்படுத்தப்படவில்லை.
அண்மையில் இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதை எதிர்த்து கடந்த ஒரு மாத காலமாக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் வை செல்வராஜ் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் எழுப்பி இருக்கிறார்கள். இந்தப் பிரச்சனையில் ஒன்றிய அரசு என்ன கருதுகிறது, என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை பற்றி வாய் திறந்து பேசவும் மறுக்கிறது.
இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் அண்டை நாடுகள் இருந்தும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும் ஒன்றிய அரசு காக்கத் தவறுகிறது.மெட்ரோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு, ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. பேரிடர்க் காலங்களிலும் உதவிக்கரம் நீட்டுவதில்லை. இந்துத்துவ அரசியலுக்கு உடன்பட மறுப்பதனால், தமிழ்நாட்டு மக்கள் வஞ்சிக்கப்படுவதன் ஒரு பகுதியாகவே மீனவர் பிரச்சனையையும் பார்க்க வேண்டியுள்ளது.இலங்கை கடற்படை கைது செய்து வைத்துள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும், இந்தப் பிரச்சனையில் ஒரு நிரந்தர தீர்வு காணவும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இலங்கை அரசு கைது செய்துள்ள மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: முத்தரசன் appeared first on Dinakaran.