நன்றி குங்குமம் தோழி
‘‘குழந்தை என்னும் வரத்திற்காக இன்றும் பல பெண்கள் ஏங்கி வருகிறார்கள். பல போராட்டங்களை சந்தித்து 14 வருடங்களுக்குப் பிறகுதான் அந்த பாக்கியம் எனக்கே கிடைத்தது’’ என்கிறார் நாற்பது வருடமாக மகப்பேறு துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி, பல குடும்பங்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தினை மீட்டுக் கொடுத்து வரும் பிரஷாந்த் மருத்துவமனையின் தலைவர் மற்றும் மகப்பேறு நிபுணர் டாக்டர் கீதா ஹரிபிரியா.
‘‘நான் எம்.எம்.சியில் மருத்துவம் படிச்சேன். அதன் பிறகு திருமணம். அவரும் அதே துறை என்பதால், இருவரும் சேர்ந்து எங்களின் மருத்துவப் பயணத்தை தொடர்ந்தோம். நான் கிட்டத்தட்ட 33 வருடமாக குழந்தையின்மை சிகிச்சை முறையில் ஈடுபட்டு வருகிறேன். இந்த துறையை தேர்வு செய்ய முக்கிய காரணம் 14 ஆண்டுகள் பல சிகிச்சை எடுத்தும் எனக்கு குழந்தை இல்லை. 90களில்தான் IVF சிகிச்சை சென்னைக்கு அறிமுகமானது. ஆனால் அதற்கு முன்பே நான் இங்கிலாந்தில் இதற்கான சிகிச்சை எடுத்து வந்தேன்.
அங்கு மூன்று முறை முயற்சித்தும் தோல்வியடைந்தது. சிகிச்சைக்கு நடுவே என் துறை சார்ந்தும் நான் என்னை அப்கிரேட் செய்து கொண்டேன். அங்குள்ள மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்களின் ராயல் கல்லூரியில் படித்து தேர்ச்சிப் பெற்றேன். ஆனால் ஒரு அம்மாவா தோல்வி அடைந்தேன். அது எனக்குள் ஒரு தளர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவிற்கு திரும்பினேன். இங்கு வந்த பிறகு என்னை நான் மனதளவில் தயார் செய்து ெகாண்டேன். கடைசியாக ஒரு முறை முயற்சிக்க முடிவு செய்தேன். வீட்டில் அவசியமா என்று கேட்டபோது, ‘இது எனக்குள் நடைபெறும் போர்… அதற்கான முடிவு தெரிய வேண்டும்’ என்று சொல்லி சிங்கப்பூரில் குழந்தைப்பேறுக்கான சிகிச்சை மேற்கொண்டேன். அந்த சிகிச்சையில்தான் என் மகன் பிரஷாந்த் பிறந்தான்’’ என்றவர், மகப்பேறியல் துறையில் ஒரு மருத்துவமனை அமைத்தது குறித்து விவரித்தார்.
‘‘என்னுடைய துறை மகப்பேறியல் என்பதால், இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல ஆய்வகக்கூடங்களில் வேலை பார்த்தேன். அவர்கள் இது குறித்து என்ன ஆய்வு செய்கிறார்கள், பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் என்ன என்று அங்கு கற்றுக் கொண்டேன். அந்தக் காலக்கட்டத்தில் லேப்ரோஸ்கோபி மற்றும் ஹிஸ்ட்ராஸ்கோபி சிகிச்சை முறைகள் இந்தியாவில் ஒரு சில மையங்களில்தான் இருந்தது.
நான் இந்த இரண்டு துறையிலும் நன்கு தேர்ச்சிப் பெற்றது மட்டுமில்லாமல் கருவுறுதல் கூடத்தில் ஒரு வருடம் வேலை பார்த்துக் கொண்டே எனக்கான சிகிச்சையை மேற்கொண்டேன். அப்போதுதான் எனக்குப் புரிந்தது, இந்த சிகிச்சையினை அனைத்துப் பெண்களாலும் வெளிநாட்டிற்கு சென்று மேற்கொள்ள முடியாது. இதே தொழில்நுட்பத்துடன் தரமான சிகிச்சையினை என் மக்களுக்காக அமைக்க விரும்பினேன். நான் கற்றுக்கொண்ட மருத்துவ முறைகள் மற்றும் என் அனுபவங்களைக் கொண்டு என் மகனின் பெயரில் குழந்தையின்மை ஆராய்ச்சி மையம் ஒன்றை சென்னையில் ஆரம்பித்தேன். நான் அங்கு கற்றுக்கொண்ட அனைத்து தொழில்நுட்பங்களையும் என் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் பயிற்சி அளித்து, ஒரு முழுமையான குழந்தைப்பேறு சிகிச்சைக்கான மருத்துவமனையாக உருவாக்கினேன்.
IVFல் மிகவும் முக்கியமானது கருவியல் ஆய்வு (embryology). கருமுட்டையில் விந்தணுவை இணைய வைத்து, கருவளர்ச்சி குறித்த ஆய்வு. இங்கு அந்த சிகிச்சைக்கான நிபுணர்கள் இல்லை. அதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து மருத்துவரை வரவழைத்தேன். அவர் எங்களுடன் 18 வருடம் இந்த ஆய்வில் பயணித்தார். நான் வேலை பார்த்த ஆய்வுக்கூடங்களில் உள்ள லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கருத்தரிக்க முடியாத பெண்களின் பிரச்னைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க முடிந்தது. அதில் வெற்றியும் கண்டேன். இதனால் பல நாடுகளில் இருந்து சிகிச்சைக்காக வர ஆரம்பித்தார்கள். தொழில்நுட்பம் வளர வளர அதற்கு ஏற்ப என் சிகிச்சை முறையிலும் மாற்றத்தை கொண்டு வந்தேன். தற்போது நிலவும் அதிநவீன சிகிச்சை மூலம் அனைவருக்கும் கருவுறுதலை சாத்தியமாக்க முடியும்’’ என்றவர் அதற்கான சிகிச்சை முறைகளைப் பற்றி விவரித்தார்.
‘‘IVF, கருமுட்டைக்குள் விந்தணுக்களை செலுத்தி அதனை கருவாக வளரச் செய்வது. ICSI, மைக்ரோஸ்கோப் மூலம் 400 மடங்கு பெரிய அளவில் பார்த்து, ஆரோக்கிய விந்தணுவை தேர்வு செய்து, கருமுட்டைக்குள் செலுத்துவோம். இதன் அடுத்த வளர்ச்சி IMSI, 7000 மடங்கு விந்தின் அமைப்பைப் பார்த்து மிகச் சிறந்ததை உள் செலுத்துவது. தற்போது இன்குபேட்டர் முறை கருவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. அதாவது, கருவை இன்குபேட்டருக்குள் வளரச் செய்து அதன் பின் கருமுட்டைக்குள் செலுத்துவோம்.
அடுத்து embryoscope. இதில் கருவின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் இயந்திரம் மூலமாக செலுத்தப்படும். இதில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமரா மூலம் கருவின் வளர்ச்சியினை கண்காணித்து, சிறந்த கருவினை கண்டறிந்து கர்ப்பப்பைக்குள் செலுத்தலாம். தற்ேபாது உள்ள AI தொழில்நுட்பம் மூலம் கருவின் வளர்ச்சியின் சதவிகிதத்தையும் கண்டறிய முடியும். எல்லாவற்றையும் விட ஒரு கருவின் அணுக்கள் இரட்டிப்பாகி வளர்வதையும் நாம் பார்க்கலாம். அடுத்து pre implantation genetic diagnosis. வளர்ச்சி அடைந்த கருவில் உள்ள அணுக்களை ஆய்வு மூலம் ஆரோக்கியமானதை கண்டறிந்து அதன் பிறகு அதனை கர்ப்பப்பைக்குள் செலுத்துவது. கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பில் பரம்பரை ரீதியாக பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை உதவும்’’ என்றவர், யாருக்கு என்ன சிகிச்சை என்பதை விளக்கினார்.
‘‘முன்பெல்லாம் கருத்தரிப்பதில் பெண்களைதான் குறை சொன்னார்கள். ஆனால் இன்று ஆண்களும் கருவுறுதல் பிரச்னையினை சந்திக்கிறார்கள். மது, புகை, பாஸ்ட் ஃபுட் உணவுகள், உடல் பருமன் போன்றவற்றால் அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. சிலருக்கு அதன் உற்பத்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கு ICSI சிகிச்சை மூலம் ஒரு முட்டைக்கு ஒரு விந்தணு என செலுத்தலாம். விந்தணு உற்பத்தியில் பிரச்னை இருந்தால், விரையின் திசுக்களில் உள்ள விந்தணுக்களை எடுத்து முட்டையின் உள் செலுத்தலாம். இன்றைய காலத்துப் பெண்களுக்கு 25 வயதிலேயே கருமுட்டையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு ெபரும்பாலும் மாதவிடாய் பிரச்னை இருக்கும்.
முட்டையின் உற்பத்தியை அதிகரிக்க டயட், யோகா எல்லாம் ஓரளவிற்கு கைகொடுக்கும். என்றாலும், தாமதிக்காமல் சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் திருமணமாகி ஒரு வருடத்தில் கருத்தரிக்கவில்லை என்றாலோ, மாதவிடாய் பிரச்னை இருந்தாலும் தாமதிக்காமல் மகப்பேறு நிபுணரை அணுகி ஆரம்ப நிலையில் பிரச்னையை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.
சில பெண்கள் வேலை காரணமாக திருமண வாழ்க்கையினை தள்ளிவைப்பார்கள். அவர்கள் தங்களின் கருமுட்டையை சேகரித்து வைக்கலாம். 30 வயதிற்கு மேல் திருமணம் செய்ய விரும்பும் பெண்கள் தங்களின் கருமுட்டையை 23 வயதிலேயே சேமித்து வைத்தால் அவர்களுக்கு வயதானாலும், அந்த கருமுட்டையின் வயது மாறாமல் ஆரோக்கியமாக இருக்கும். அதன் பிறகு IVF முறையில் கருத்தரிக்கும் போது, கருமுட்டை ஆரோக்கியமாக இருப்பதால் எளிதில் கர்ப்பம் தரிக்க முடியும்.
வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்தினால், பிரச்னைக்கு ஏற்ற சிகிச்சையினை பெற்று, பெண்கள் கருத்தரிக்கலாம். வரும் காலத்தில் prp stem cells மூலம் செயற்கை முட்டை, விந்தணு, கர்ப்பப்பை மூலம் குழந்தையை உருவாக்குவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. என்னதான் மருத்துவ துறை வளர்ச்சி அடைந்தாலும், தம்பதியினர் தங்களின் ஆரோக்கியத்தின் மேல் சிறிது கவனம் செலுத்த வேண்டும்.
‘‘சமச்சீரான உணவுப்பழக்கம் அவசியம். அதிகளவு எண்ணெய், இனிப்பு உணவுகள், காபி, டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காய்கறி, கீரைகள், பழங்கள், பால் உங்களின் தினசரி உணவில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். மனஉளைச்சலை குறைக்க யோகா, தியானம், உடற்பயிற்சி, நடைப்பயிற்சியினை மேற்ெகாள்ளலாம். கணவன்-மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து வாழ கத்துக்கணும். பெண்கள் மாதவிடாய், வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்’’ என்று ஆலோசனை வழங்கினார் மகப்பேறு நிபுணர் டாக்டர் கீதா ஹரிபிரியா.
தொகுப்பு: ஷம்ரிதி
The post மகப்பேறியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெண்களுக்கான வரம்! appeared first on Dinakaran.