நன்றி குங்குமம் தோழி
தாய்மை மிகவும் உன்னதமானது. அதைவிட தூய்மையானது ஒவ்வொரு பெண்ணும் தன் குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பால். அப்படிப்பட்ட தாய்ப்பாலினை தங்களின் தாய்மை மற்றும் குழந்தைகளின் நினைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். ‘‘தாய்ப்பாலை அப்படியே வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் அதை அழகான டாலர், மோதிரம் அல்லது பொம்மையாக மாற்றி அமைக்கலாம். இதன் மூலம் தாய்மையை உணர்த்திய அந்த நினைவுகளை என்றென்றும் நீங்காமல் பொக்கிஷமாக பாதுகாக்க முடியும்’’ என்கிறார் தாரிகா. சென்னையில் கொளத்தூரில் வசிக்கும் இவர் தாய்ப்பாலில் பலவித அணிகலன்களை செய்து அதன் மூலம் தாய்மைக்கான நீங்கா நினைவுகளை ஏற்படுத்தி தருகிறார்.
‘‘எனக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை பிறந்த பிறகுதான் நான் இதை செய்ய ஆரம்பித்தேன். ஒரு பெண் முதல் முறையாக தாயாகும் போது அதில் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. எனக்கும் அப்படித்தான் இருந்தது. அதனால் நான் என் குழந்தை சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் சேகரித்து வைத்திருந்தேன். அதே போல் என் தாய்ப்பாலையும் ஏதாவது ஒரு முறையில் நினைவாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அப்போது தாய்ப்பாலில் பலர் அழகிய நகைகள் செய்வதை கேள்விப்பட்டு அவர்களை தொடர்பு கொண்டேன். ஆனால் அவர்கள் அதை செய்து கொடுக்க சொன்ன விலை மிகவும் அதிகமாக இருந்தது. அதனால் நாமே செய்யலாம்னு முடிவு செய்தேன். எனக்கான நினைவுகளை நானே அமைத்தேன்’’ என்றவர், அதற்கான பல ஆய்வில் ஈடுபட்டுள்ளார். ‘‘தாய்ப்பால் ஒரு உணவு என்பதால், அதை நீண்ட நாட்கள் அப்படியே வைத்திருக்க முடியாது. கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக இருக்க, ப்ரிசர்வேடிவ்களை சேர்க்கணும்.
எப்படிப்பட்ட ப்ரிசர்வேடிவ்களை பயன்படுத்தணும்னு எனக்குத் தெரியல. கூகுள் செய்து பார்த்தேன். அப்போது இணையத்தில் வெளிநாட்டில் இதை கொண்டு நகை செய்பவர்கள் குறித்து தெரிய வந்தது. அவர்களை தொடர்பு கொண்டு, சில டிப்ஸ்களை கேட்டு அதன்படி செய்து பார்த்தேன். ஆனால் பால் மஞ்சள் மற்றும் பிரவுன் நிறமாக மாறியது. ஒவ்வொரு முறை நான் சேர்க்கும் ப்ரிசர்வேடிவ்களின் அளவினை மாற்றிப் பார்த்தேன். சில சமயம் இரண்டு நாட்கள் அல்லது 20 நாட்களில் அதன் நிறம் மாறிடும்.
அதனால் நான் எப்போது செய்தாலும், குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கான்னு பார்ப்பேன். கிட்டதட்ட ஆறு மாசம் பல டிரையல்கள் செய்த பிறகு இதற்கான சரியான தீர்வு எனக்கு கிடைச்சது. முதலில் என்னுடைய தாய்ப்பாலைக் கொண்டு எனக்கான அணிகலன்களை செய்தேன். அதைப் பார்த்து நண்பர்கள், உறவினர்கள் என பலர் கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கும் செய்து கொடுத்தேன். நான் இதனை ஆர்வமாக செய்வதைப் பார்த்த என் கணவர் மற்றும் குடும்பத்தினர் இதையே ஒரு ெதாழிலாக செய்யச் சொன்னாங்க. அதனால் எல்லோராலும் பெறக்கூடிய குறைந்த விலையில் இதனை விற்பனை செய்ய துவங்கினேன்’’ என்றவர் தாய்ப்பாலில் அணிகலன்கள் செய்யும் முறைகள் குறித்து விவரித்தார்.
‘‘தாய்ப்பாலினால் செய்யப்படும் அணிகலன்களை கஸ்டமைஸ்ட் முறையில்தான் செய்ய முடியும். குறிப்பாக அந்தந்த தாய்மார்கள், தங்களின் தாய்ப்பாலை எங்களுக்கு அனுப்பி தங்களுக்கு பிடித்த டிசைன்களை கேட்பார்கள். அதன்படிதான் செய்து வருகிறேன். தாய்ப்பாலினை அதற்கான வங்கிகளில் இருந்து பெறுவதில்லை. இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபர்கள் விரும்பி கேட்டால் மட்டுமே செய்து தருகிறேன்.
முதலில் அம்மாக்களுக்கு தாய்ப்பாலினை சேகரிக்கக்கூடிய ஒரு கிட் ஒன்றை நாங்க அனுப்பி வைப்போம். அதில் சில துளி ப்ரிசர்வேடிவ்களை சேர்த்து இருப்போம். அப்போதுதான் அவர்கள் பாலை சேகரித்து எங்களுக்கு அனுப்பி வைக்கும் வரை கெடாமல் இருக்கும். திரிஞ்சி போனால் அதனை பயன்படுத்த முடியாது. எங்களிடம் அந்த கிட் வந்தவுடன்
முதலில் டபுள் பாயில் முறையில் பாலை சூடாக்குவோம்.
அதன் பிறகு அதில் ப்ரிசர்வேடிவ்களை சேர்த்து ஆறவைத்தால் அது கட்டியாகிடும். பிறகு அதனை பவுடராக்கி அதில் சில ரசாயனங்களை சேர்த்தால் திக்கான வெள்ளை நிற கிரீம் போல மாறும். பிறகு விரும்பும் டிசைன் மோல்டுகளில் சேர்த்தால் அந்த வடிவத்திற்கு ஏற்ப மாறும். இதில் பென்டென்ட், மோதிரம், கொலுசு, பிரேஸ்லெட், வளையல், கம்மல் என நாம் விரும்பும் டிசைன்களில் வடிவமைக்கலாம்.
சிலர் தங்கள் குழந்தையின் முடி, நகம், தொப்புள்கொடி கொண்டு போட்டோ பிரேம் போல அமைத்து தரச் சொல்வாங்க. அம்மா-குழந்தை வடிவ பொம்மைகள், கீச்செயின், ஃப்ரிட்ஜ் மேக்னெட்டும் செய்கிறோம். வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவத்திற்கு ஏற்ப பாலின் அளவு மாறுபடும். அதற்கு ஏற்ப அவர்கள் பாலினை சேகரித்து எங்களுக்கு அனுப்ப வேண்டும். ஒரு டாலர் என்றால் 5 மில்லி லிட்டர். வளையல் செய்ய 10 மில்லி லிட்டர். அதுவே பொம்மை செய்ய 30 மில்லி லிட்டர் வேண்டும்’’ என்றவர் ஒரு பொறியியல் பட்டதாரியாம்.
‘‘பொறியியல் படிப்பு முடிச்சிட்டு ஐ.டி துறையில் பயிற்சியாளராகத்தான் வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பிறகு என்னால் வேலையை தொடர முடியல. சும்மா பொழுதுபோக்கிற்காகத்தான் இதனை துவங்கினேன். இப்போது இதுவே என்னுடைய தொழிலாக மாறிவிட்டது. இந்த பிசினஸ் ஒருவர் மூலம் மற்றொருவர் சொல்லித்தான் பலருக்கு தெரிய வந்தது. இணையத்தில் நான் தயாரிக்கும் பொருட்களை பதிவு செய்தேன். அதன் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் என்னை அணுகினார்கள்.
தற்போது இந்தியா முழுக்க செய்து தருகிறேன். மேலும் உலகளவில் இருந்து ஆர்டர் எடுத்து செய்யும் எண்ணம் உள்ளது. அதற்கு ஏற்ப எங்களின் கிட்டினை நாங்க ரெடி செய்யணும். அடுத்து இதற்கு என தனிப்பட்ட ஸ்டுடியோ அமைத்து, அதனை பிரான்சைசி முறையில் செயல்படுத்த விரும்புகிறேன். தற்போது என்னிடம் நான்கு பெண்கள் வேலை பார்க்கிறார்கள். மேலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர விரும்புகிறேன்’’ என்றவர், இந்த அணிகலன்களை பராமரிக்கும் முறை குறித்து விவரித்தார்.
‘‘பென்டென்ட், வளையல், கொலுசு… இவைகளை நாம் அன்றாடம் அணிந்து கொள்ளலாம். ஆனால் அதைத் தொடர்ந்து அணிவதாக இருந்தால் அதனை கவனமாக பராமரிக்க வேண்டும். அணிகலன்களை அணிந்து கொண்டு சூடான தண்ணீரில் குளிக்கக் கூடாது. அதன் மேல் அதிக அளவு மேக்கப் சாதனங்கள் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் சென்ட் பயன்படுத்தும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.
இல்லை என்றால் அது மஞ்சள் நிறமாக மாறிடும். இதற்கு ஒரு சிறந்த வழி குளிக்கும் போதும், மேக்கப் போடும் போதும் இவற்றை கழட்டி வைத்துவிட்டு பிறகு அணிந்து கொள்ளலாம். அதே போல் கையில் மோதிரம் அணிந்திருந்தால் சாப்பிடும் போதும் மற்ற வேலைகளை செய்யும் போதும் கழட்டி வைப்பது நல்லது. இதன் மூலம் அதன் தன்மை மாறாமல் நீண்ட நாட்கள் பாதுகாக்க முடியும்’’ என்றார் தாரிகா.
தொகுப்பு: ஷன்மதி
The post தாய்மையின் நினைவுகளை பொக்கிஷமாக்கும் ஆபரணங்கள்! appeared first on Dinakaran.