×

காரைக்காலில் மூதாட்டியை தாக்கி 50 பவுன் நகை கொள்ளையடித்த கும்பல் கைது

*32 பவுன் மீட்பு

காரைக்கால் : காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த அம்பகரத்தூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமலிங்கம். இவரது மனைவி கனகவள்ளி(76).
கடந்த ஜூலை 22ம் தேதி இரவு 10 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் கதவை தட்டியுள்ளனர். ராமலிங்கம் வீட்டில் இல்லாத நிலையில் கதவை திறந்த கனகவள்ளியை சப்பாத்தி கட்டை கொண்டு தாக்கிய மர்ம நபர்கள் வீட்டினுள் நுழைந்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

திருட்டு சம்பவம் தொடர்பாக அம்பகரத்தூர் புறக்காவல் நிலையத்தில் ராமலிங்கம் புகார் அளித்தார். இதன் பேரில் எஸ்பி பாலசந்தர் தலைமையிலான தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அம்பகரத்தூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்களது உடமைகளை சோதனை செய்த போது, சாகுல்(19) என்பவரது பாக்கெட்டில் ஒரு தங்க நாணயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சாகுலையும், அவருடன் வந்த வெங்கடேஷ்(20) என்பவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

இதில் அம்பகரத்தூரை சேர்ந்த இந்த இருவரும், வீடு புகுந்து மூதாட்டி கனகவள்ளியை தாக்கி கொள்ளையடித்த தங்க நகைகளில் அந்த நாணயமும் ஒன்று என்பது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் சாகுல், வெங்கடேசன் ஆகியோருடன் அவர்களது நண்பர்கள் காரைக்கால் அம்பகரத்தூரை சேர்ந்த விஜய்(18), மயிலாடுதுறையை சேர்ந்த ராகுல்(20), ஸ்ரீதர்(22), புகழேந்தி(20) மற்றும் 16 வயது சிறுவன் என 5 பேர் அடையாளம் காணப்பட்டு சிறுவன் உட்பட 7 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 32 பவுன் தங்க நகைகள், 5 செல்போன், மூதாட்டியை தாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சப்பாத்தி கட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் மீதி நகைகளுடன் தலைமறைவாக உள்ள 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை தேடி வருகின்றனர். கொள்ளையர்களை விரைவாக பிடித்து, கொள்ளை பொருட்களை பறிமுதல் செய்த போலீசாரை, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் பாராட்டினார்.

The post காரைக்காலில் மூதாட்டியை தாக்கி 50 பவுன் நகை கொள்ளையடித்த கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Bown ,Ramalingam ,Ambarathur Main Road ,Karaikal District Tirunallaru ,Kanakavalli ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்