×

வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்; இந்துத்துவக் கும்பலின் இஸ்லாமிய வன்மமும், இந்து ராஷ்டிரிய கனவும் தகர்க்கப்பட்டே ஆக வேண்டும்: வைகோ கண்டனம்

சென்னை: இந்துத்துவக் கும்பலின் இஸ்லாமிய வெறுப்பும்,வன்மமும், இந்து ராஷ்டிரிய கனவும் தகர்க்கப்பட்டே ஆக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை ஒழித்துக் கட்டும் வகையில் வக்ஃபு சட்டம் 1995 திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது பாஜக அரசு. வக்ஃபு வாரியம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது? முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களைத் தானமாகக் கொடுத்தனர். இப்படிப்பட்ட சொத்துக்கள்தான் வக்ஃபு வாரியத்தின் சொத்துக்கள் என்று சொல்லப்படுகின்றன.

இந்த சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, முஸ்லிம் மக்கள் நலனுக்கான பணிகளை ஏழை-எளியோர் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். பள்ளிவாசல் பராமரிப்பு, தர்கா பராமரிப்பு, முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றுக்காகச் செலவிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, இப்படிப்பட்ட சொத்துகள் தானமாக வழங்கப்பட்டன. தானமாக வழங்கப்பட்ட இடங்களின் பராமரிப்பையும் கண்காணிப்பையும் வக்ஃபு வாரியம் செய்தாலும், இடங்களை வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பல காலமாகச் சொத்துக்களைப் பராமரித்து வந்தார்கள்.அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வக்ஃபு வாரியத்திடம் சேர்த்தார்கள்.

இப்படிச் சொத்துக்களைப் பராமரிப்போரை முத்தவல்லிகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்த முத்தவல்லிகளை அறங்காவலர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். முத்தவல்லிகள் செயல்பாடுகளை முறைப்படுத்த 1954-ல் உருவாக்கப்பட்டதுதான் வக்ஃபு வாரியம். ஒன்றிய – மாநில அரசுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த வக்ஃபு வாரியம், முஸ்லிம் பெரியவர்கள் இறைப் பணிக்காக வழங்கிய பெரும் சொத்துக்களைப் பராமரித்துக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றது. நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்குவதுடன், வக்ஃபு சொத்துகளை அபகரித்து பறிக்கும் நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்டம் 1995 (திருத்தம்) என்ற பெயரிலான மசோதாவை தாக்கல் செய்துள்ளது பாசிச மோடி அரசு.

பொதுவாக ஏற்கெனவே உள்ள சட்டத்தில் திருத்தங்கள் என்றால் ஒன்று, இரண்டு முதல் 10 திருத்தங்கள் வரை மேற்கொள்வார்கள். ஆனால் 40 திருத்தங்களை மேற்கொள்ளப் போகிறோம் என்று அறிவித்து அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள மத உரிமைகளை ஒழித்துக் கட்டியுள்ளது பாசிச மோடி அரசு. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25 வழங்கும் உரிமைகள் இஸ்லாமியர்களுக்கு பொருந்தாதா? மேலும் இத்திருத்தங்கள் மூலம் நாடு முழுவதிலும் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான 7,85,934 சொத்துக்களைப் பறிமுதல் செய்து விருப்பம் போல் பயன்படுத்த பாஜக அரசு முனைந்து இருக்கிறது.வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தவர் மற்றும் பெண்களை உறுப்பினர்களாக நியமிக்க இச்சட்ட திருத்தம் முறை செய்கிறது.

இதன் மூலம் வக்ஃபு வாரிய சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையை இஸ்லாமியர் அல்லாதவருக்கு வழங்கியுள்ளது இந்த சட்ட திருத்தம். வக்ஃபு வாரிய சொத்துகள் மீதான முடிவுகள் எடுக்கும் உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியதன் மூலம், வக்ஃபு சொத்துக்களை இஸ்லாமியர்களிடமிருந்து பறிக்கும் சதியும் அரங்கேறி உள்ளது.வக்ஃபு வாரியத்திற்கும் அரசுக்கும் அல்லது தனி நபர்களுக்கும் இடையிலான சொத்து விவகாரத்தில் முடிவினை கூறக்கூடிய உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு அளித்ததில் இருந்து வக்ஃபு வாரிய சொத்துக்கள் இனி இஸ்லாமியரிடமிருந்து பறிக்கப்படுவதற்கான சட்டப்பூர்வமான வேலையை பாசிச மோடி அரசு தொடங்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.இந்துத்துவக் கும்பலின் இஸ்லாமிய வெறுப்பும் வன்மமும், இந்து ராஷ்டிரிய கனவும் தகர்க்கப்பட்டே ஆக வேண்டும். மோடி அரசுக்கு ஆதரவு நல்கி வரும் நண்பர்களான ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இருவரும், மத நல்லிணக்கத்தைச் சிதைத்து, நாட்டின் பன்முகத்தன்மையை ஒழித்துக்கட்டும் ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் முயற்சிக்கு துணை போகக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்; இந்துத்துவக் கும்பலின் இஸ்லாமிய வன்மமும், இந்து ராஷ்டிரிய கனவும் தகர்க்கப்பட்டே ஆக வேண்டும்: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Vaiko ,CHENNAI ,Madhyamik General Secretary ,Dinakaran ,
× RELATED மக்கள் தொகை கணக்கெடுப்பை...