ஆந்திரா மாநிலம் – சிராளா
9.8.2024 நாக பஞ்சமி
நம் நாட்டில் நல்ல பாம்பைத் தெய்வமாக வணங்கி வழிபடும் வழக்கம் இன்றும் இருக்கிறது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் பாம்பு மனித குலத்துக்குச் செய்து வரும் மகத்தான சேவையை நம்மில் பலர் அறிய மாட்டார்கள் நல்ல பாம்பின் விஷம் இன்று மக்களுக்கு நோய் போக்கும் அமிர்தமாக இருந்து வருகிறது. நல்ல பாம்புக்குக் காது கேட்காது. அதனால் அது எந்த இசையையும் அனுபவிக்க முடியாது.
மகுடியில் மயங்கி படம் எடுத்து ஆடுவது அதன் ஓசையில் மயங்கி அல்ல. பாம்பாட்டி தரையைத் தட்டிக் கொண்டு ஊதுவதால் ஏற்படும் நில அதிர்வினால்தான் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நல்ல பாம்பு உண்மையிலேயே நல்ல பாம்புதான். சிவபெருமான் நல்ல பாம்பை ஆபரணமாக அணிந்திருக்கிறார். பாற்கடலில் பள்ளிகொண்டருளும் பரந்தாமன் பாம்புப் படுக்கையில் படுத்தே கிடக்கிறார். முருகனின் மயில் வாகனத்தின் காலடியில் பாம்பு படுத்தே கிடக்கிறது. விநாயகப் பெருமான் நல்ல பாம்பை யக்ஞோ வீபமாகவும் இடையணியாகவும் அணிந்திருக்கிறார். பாம்பான ராகுவும் கேதுவும் மக்களின் வாழ்க்கையோடு கலந்து கிடக்கிறார்கள்.
இப்படி எத்தனை எத்தனையோ செய்திகள் பாம்புகளைப் பற்றிப் பரவிக் கிடக்கின்றன. உண்மையில் விவசாயிகளின் நண்பன் பாம்பு. நெல் வயலில் பயிரை அழிக்கும் பல பிராணிகளை அது கொன்று அழித்து உதவு கின்றன. பயிர்களின் பரம விரோதியான எலிகள் வயல் வெளிகளில் அதிகமாகாமல் அவற்றின் எண்ணிக்கை பெரிதும் குறைப்பவை பாம்புகளே! இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிக்கு அடையாளமாக உள்ள சிவலிங்கத்தைச் சில இடங்களில் பல தலைகள் கொண்ட நாகம் பாதுகாத்துக் கொண்டிருப்பதைப் போல் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதை இந்தியா முழுவதும் உள்ள சிவாலயங்களில் காணலாம். தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சிவலிங்கத்தை அலங்கரிப்பார்கள். அப்போது பல தலைகள் (பிரபை) கொண்ட வெள்ளியால் செய்யப்பட்ட நாகம் சிவலிங்கத்தின் பின்புறத்தில் இருந்து படம் எடுத்து சிவலிங்கத்தைப் பாதுகாப்பது போல் வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் தலத்தில் பாம்புக் கென்றே ஒரு கோயில் அமைந்துள்ளது. இறைவனின் திருநாமம் பாம்புரேஸ்வரர். இறைவி பிரம்மநாம்பிகை. சர்ப்ப தோஷம் நீக்கும் சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது. ஒரு சமயம் விநாயகர் பெருமான் கயிலை சென்று தந்தை சிவபெருமானை வணங்கிய போது, அவர் கழுத்தில் இருந்த பாம்பு, தன்னையும் விநாயகர் வழிபட்டதாக நினைத்து கர்வம்கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்க சாபமிட்டார்.
ஆதிசேஷனும், அஷ்ட மகா நாகங்களும், ராகுவும் கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்ததவறுக்காக நாக இனத்தையே தண்டிக்கலாகாது என்றும், தவறு செய்த பாம்பையும் மன்னிக்கும் படியும் சிவனை வேண்டினர். மகா சிவராத்திரியன்று நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு நாகங்களும், ராகு – கேது ஆகிய இரு நாகங்களும் சேர்ந்து வந்து பணிவுடன் வேண்டி சாபவிமோசனம் பெற்றனர். சிவனின் சாபம் நீங்கிய இடம் இந்தத் திருப்பாம்புரம் திருத்தலமாகும். இதனால் சிவன் சாபம் நீங்கிய இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் நாகப் பாம்புகளின் நடமாட்டம் இத்தலத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கேரளாவில் இப்போதும் பாம்பு வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இங்கிருக்கும் பாம்புக் கோயில்களை ‘சர்ப்பக் காவு’ என்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் இங்கு 15-ஆயிரம் சர்ப்பகாவுகள் இருந்ததாக பாம்புக் கோயில்களின் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் காடுகளும் தோட்டங்களும் அதிகம் என்பதால் பாம்புகளும் ஏராளமாக வசிக்கின்றன. பாம்பைக் கொல்வதால் குழந்தைப் பேறின்மை, குஷ்ட ரோகம், பார்வை இழப்பு ஆகியவை ஏற்படும் என்று இம்மாநில மக்களும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அதனால் இங்கு பாம்பை தெய்வமாக எண்ணி வழிபடுகிறார்கள். இதைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பினார் ஒரு ஆங்கிலேய ஆய்வாளர். இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில், முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப், பாம்புகளைப் பற்றி ஆய்வு செய்து வந்த ‘ஹாரி மில்லா’ என்ற ஆங்கிலேயர் தம் அனுபவத்தைச் சொல்கிறார்;
‘‘தமிழ் மக்களில் பலர் நல்ல பாம்பைத் தெய்வமாக மதித்து வழிபடுகிறார்கள். அவர்கள் கொடிய நல்ல பாம்பை நேரில் கண்டால் பயந்து ஓடாமல் பக்தியுடன் எப்படி வணங்குகிறார்கள்? அதே போல நல்ல பாம்பும் மனிதர்களைக் கண்டால் வேகமாக ஓடி மறையும் குணம் உடையதாயிற்றே? அது எப்படி மனிதர்களைப் பார்த்து ஓடாமல் பூஜையில் லயித்து இருக்கும்? என்று பரீட்சித்துப் பார்க்க விரும்பினேன்’ என்னிடம் இருந்த பெரிய நல்ல பாம்பை ஒரு பெரிய கரையான்புற்றில் கிராமத்துப் பெண்கள் பார்க்கும்படி போட்டுவிட்டேன்.
பாம்பைக் கண்ட அவர்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அறிய அங்கேயே ஒரு இருபதடி தொலைவில் நின்றேன். நான் புற்றில் நல்ல பாம்பை விட்ட விஷயம் கிராமம் முழுவதும் விரைந்து பரவியது. அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கரையான் புற்றைச் சுற்றிப் பெண்கள்கூட ஆரம்பித்துவிட்டார்கள். பிறகு ஆண்களும் சிறுவர் சிறுவரும் வந்து சேர்ந்து விட்டார்கள். எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. மேனி வியர்த்தது. ஆபத்தை உணராமல் கொடிய விஷ நாகத்தைப் புற்றில் போட்டு விட்டோமே? அது கோபம்கொண்டு யாரையேனும் கடித்து விட்டால் என்ன செய்வது என்று மிகவும் கவலைப்பட்டேன்.
என்னையே நான் நொந்து கொண்டேன். பாம்பு அப்படி ஏதாவது செய்ய ஆரம்பித்தால் அதைப் பிடித்து விடுவதற்கும் தயாராகவும் இருந்தேன். ஆனால், அந்த அதிசயம் நடந்தது. என் கண்ணையே நம்ப முடியவில்லை. புற்றைச் சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் அனைவரும் புற்றை வணங்கியபடி ‘அம்மா, நாகம்மா’ அருள்புரிவாய் தாயே!’ என்று அழைத்துப் பக்திப் பரவசத்துடன் வணங்கவே ஆரம்பித்துவிட்டனர்.
தொடர்ந்து நடந்த சம்பவத்தைப் பார்த்து வியந்து போனேன். மெய் சிலிர்த்துப் போனேன். சாதாரணமாக மக்கள் கூட்டத்தைக் கண்டதும் ஓடி ஒளிந்து கொள்ளக்கூடிய குணம் படைத்த நல்ல பாம்பு புற்றிலிருந்து கிளம்பி அழகாகப் படமெடுத்து, நாக்கை நீட்டியபடி அவர்களுக்கு முன் அழகாகப் படமெடுத்து ஆடியதைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். பாம்பு அந்த இடத்தைவிட்டு நகரவோ அல்லது தன்னை வணங்குபவர்களைத் தாக்கவோ அது முற்படவில்லை. மாறாக கிராமத்துப் பெண்களில் சிலர் கிண்ணங்களில் பாலும் முட்டையும் கொண்டு வந்திருந்தனர். கொஞ்சமும் பயமில்லாமல் பாலையும் முட்டைகளையும் புற்றின் முன் வைத்தனர். என் வீட்டில் வேலைக்காரியாகப் பணிபுரியும் சீத்தம்மாவும் அந்தப் பாம்புக்குப் பால் கொண்டு போய் வைத்தாள்.
அவளும் சிறிதுகூட பயப்படவில்லை. பாம்பு புற்றிலிருந்து இறங்கி வந்து பாலைப் பருகியது. எல்லாப் பெண்களும் தங்களை மறந்த நிலையில் நல்ல பாம்பை வணங்கிய படியே மெய் மறந்திருந்தனர். இப்படியொரு அற்புதமான காட்சியை நான் எங்கும் கண்டதேயில்லை. அங்கிருந்த சில பெண்களிடம், நல்ல பாம்பைக் கண்டு உங்களுக்கு பயமாக இல்லையா? என்று கேட்டேன். ‘அது எங்களை ஒன்றும் செய்யாது. பாம்பை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம். சிவபெருமானே எங்களுக்கு நல்ல பாம்பாக வந்து காட்சி தருகிறார். இந்த நல்ல பாம்பில் நாங்கள் கடவுளைக் காண்கிறோம்.
கடவுளாகவே வணங்குகிறோம். எங்கள் கடவுளைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?’ என்றார்கள். அப்போதுதான் நான் உணர்ந்தேன். ஐயாயிரம் ஆண்டுகளாக இந்திய மக்கள், பாம்புகளை தெய்வமாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள் என புராணங்களும் வரலாறுகளும் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைத் தெரிந்து கொண்டேன்!’’ என்றார், ஹாரிமில்லர். இவற்றையெல்லாம் மெய்ப்பிக்கும் வகையில், வருடத்தில் ஒரு தடவை நாகங்களுக்காகவே இந்துக்கள், உயிருள்ள நல்ல பாம்புகளுடன் சேர்ந்து ‘நாக பஞ்சமி’ என்னும் அற்புதமான பண்டிகையைக் கோலாகலமாக, ஒரு கிராமத்து மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஆம்! ஆந்திர மாநிலத்தில் உள்ள சிராளா என்கிற ஒரு பெரிய கிராமத்தில் ‘நாக பஞ்சமி’ பண்டிகையின்போது நூற்றுக் கணக்கான நல்ல பாம்புகளைக் கொண்டு வந்து வைத்து விமரிசையாக ‘நாக பஞ்சமி’யைக் கொண்டாடுகிறார்கள். இந்த வழிபாடு எப்போது யாரால் தொடங்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், பல நூறு வருடங்களாக இப்படி உயிருள்ள பாம்புகளை வைத்து ‘நாகபஞ்சமி’யைக் கொண்டாடுகின்றனர்.
கர்ணபரம் பரையாக, செவி வழி செய்தியாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் இந்த சிராளா கிராமத்திற்கு அருகில் உள்ள மலையில் மகான் ஒருவர் இருந்தாராம். அவர் அந்த கிராம மக்களின் நோய்நொடிகள் தீர மூலிகை மருந்துகள் கொடுத்தும் பல அரிய சேவைகள் செய்து வந்தாராம். அவர் ஒரு நல்ல பாம்பை வளர்த்து வந்ததோடு, அதை தெய்வமாகப் போற்றி வணங்கி வழிபட்டும் வந்தாராம். ஊரைச் சுற்றி காடுகளும் புதர்களும் இருந்ததால், பாம்புகளும் ஏராளமாக இருந்தனவாம்.
பாம்புகளைப் பார்த்து அந்த கிராம மக்கள் மிகவும் பயம் கொண்டதோடு, மிகுந்த அச்சத்துடனும் வாழ்ந்து வந்த போது, அந்த மகான் மக்களை அழைத்து பாம்பின் பெருமையை எல்லாம் விவரமாக எடுத்துக் கூறிவிட்டு, ‘அன்பர்களே இது விஷப் பாம்பல்ல. நல்ல பாம்பு. இதுவே கடவுள். இதுவே சிவன். இதை வாஞ்சையுடன் வழிபட்டு வாருங்கள். இதைக் கண்டு பயப்படாதீர்கள். தப்பித் தவறி அதை மிதித்துவிடாதீர்கள். அப்படி மிதித்துவிட்டால்தான் தன்னை இவர்கள் கொல்லப் போகிறார்கள் என்று எண்ணி உங்களைக் கடித்துவிடும். இது தெய்வம் என்பதை மறந்து விடாதீர்கள். எப்போதும் வழிபடுங்கள். நல்ல பாம்பு நல்லதையே செ்யயும். நம்மைக் காக்கும் தெய்வமும் இது!’’ என்று கூறி அவர்களின் அச்சத்தைப் போக்கினாராம்.
அதன் பிறகு சிராளா கிராம மக்கள் பாம்புகள் பற்றிய பயம் சிறிதுமின்றி வாழ்ந்து வருகிறார்கள். அந்த மகானின் வேண்டுகோளின்படி ஒவ்வொரு ஆண்டும் ‘ஆஷாட’ எனும் ஆடி மாதத்தில் வரும் ‘நாக பஞ்சமி’ அன்று ‘நாக வழிபாடு’ நடத்தி வருகிறார்கள், சிராளா கிராமத்து மக்கள்.ஆடி மாதத்தில் ‘நாக பஞ்சமி’ நெருங்கியதும், சீராளாவில் உள்ள கிராம மக்கள், நல்ல பாம்பைத் தேடி பல நாட்களுக்கு முன்பே பல மைல்கள் சுற்றளவுக்கு காடுகள், மலைகள், புதர்கள் என பாம்புகள் வசிக்கக் கூடிய இடங்களைத் தேடிச் செல்கிறார்கள். கரையான்புற்றுக்களையும், புதர்களையும், சல்லடை போட்டு அலசுகிறார்கள்.
அக்கிராம மக்கள் விஷப்பாம்புகளைப் பிடிப்பதில் மிகவும் கை தேந்தவர்கள். அப்போது கிடைக்கும் நல்ல பாம்புகளை மிகவும் எச்சரிக்கையாக லாகவமாகப் பிடித்துத் தங்களுடைய பெரிய மண் பாத்திரங்களில் பக்குவமாக வைத்து எடுத்துக் கொண்டு தங்கள் இல்லங்களுக்குக் கொண்டு சென்று பத்திரமாக வைத்து பாதுகாப்பதோடு, அதற்கு வேளை தவறாமல் உணவளித்தும் பராமரிக்கிறார்கள். வழிபடவும் செய்கிறார்கள்.
இப்படியே கிராமம் முழுவதும் செயல் படுகிறது. ‘நாக பஞ்சமி’ நாளன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்துவிட்டு, புத்தாடை அணிந்து மக்கள் எல்லோரும் சூரியன் உதயமானது பக்திப் பரவத்துடனும் ஆரவாரத்துடனும் பாம்புகள் அடைக்கப்பட்ட மட்கலங்களைத் தலையில் சுமந்து கொண்டு ஊரில் உள்ள ஆலயத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்கிறார்கள். அந்த ஊர்வலத்தின் முன்னால் இசைவாணர்களின் கச்சேரிகளும், பாரம் பரிய இசைக் கருவிகளின் வாத்திய முழக்கங்களும் பெருத்த ஓசையுடன் முழங்கிக் கொண்டு செல்கின்றன.
உடும்பை செல்லப் பிராணியாக விளக்கும் இளைஞர்கள் பலர், குங்குமம் பூசப்பட்ட உயிருள்ள சிறியதும் பெரியதுமான உடும்புகளை மூங்கில் கம்பத்தின் உச்சியில் கயிறுகளினால் இறுகக் கட்டி அந்தக் கம்பங்களை ஆரவாரத்துடன் ஏந்தியவாறு ஆடிக்கொண்டு செல்கிறார்கள். அம்மன் கோயிலை அடைந்தவுடன் ஊர்வலம் நின்று விடுகிறது. பெண்கள் அனைவரும் சுமந்து வந்த, நாகங்கள் அடங்கிய மட்கலங்களை ஆலயமண்டபத்தில் மெதுவாகி இறக்கி வைத்து, திங்கிழைக்காதவாறு திறந்து அவற்றை கோயிலுக்குள் விட்டு விடுகிறார்கள்.
குங்குமம் பூசிய கொம்புகளில் கட்டிய உடும்புகளையும், அந்தக் கோயிலில் அதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் வரிசையாக வைத்துவிடுகிறார்கள். மட்கலத்திலிருந்து வெளியே வந்த நல்ல பாம்புகள், தலையை உயர்த்தி படம் எடுத்து நாக்கை நீட்டியபடி ஆடிக் கொண்டே இருக்கின்றன. சிறியதும் பெரியதுமாக பல வயதுகளில் காட்சியளிக்கும் பாம்புகளின் ஆட்டம், அச்சத்துடன் மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதக் காட்சியைக் கண்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து, பக்திப் பெருக்குடன் பாம்புகளை வழிபடுகிறார்கள்.
பெண்களும், சிறுவர் சிறுமியரும் படமெடுத்து ஆடும் பாம்புகள் பாலும் முட்டையும் நிவேதனமாகப் படைக்கிறார்கள். மதியம் வரை பல விதமான சடங்குகள் செய்தும், பல விதமானமாக படைக்கிறார்கள். கற்பூரதீபம் காட்டி, மந்திரத்தை ஜெபிக்கிறார்கள். பெண்மணிகள் எல்லோரும் விழுந்து விழுந்து வணங்கி வழிபடுகிறார்கள். எல்லோர் முகத்திலும் மலர்ச்சி, மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. சாயங்காலம் வரைக்கும் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக கழிகிறது. மறுபடியும் பாம்புகளைப் பிடித்துக் குடத்திலிட்டு, சுமார் ஆறு மணியளவில் எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகளில் மேடைகளை அமைத்து, பாதுகாப்புடன் அவற்றை காட்சிக்கு வைத்து பிரதான வீதிகளில் மேள தாளத்துடன் கொண்டு செல்கிறார்கள்.
அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் விண்ணதிரும். மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட நாகங்கள் போல், பாம்புகள் எல்லாம் அடக்கத்துடன் படமெடுத்து ஆடுவதுடன் சரி, வேறு எந்த விதமான எதிர்ப்புகளையும் காட்டுவதில்லை. எங்கேயும் காண முடியாத காட்சி. அற்புதம்…! பாதுகாப்புடன் பாம்புகள் ஊர்வலம் முடிந்தவுடன், இரவானதும் மீண்டும் மட்கலங்களில் பாம்புகளைவிட்டு வைக்கிறார்கள். அந்த இரவு முழுவதும் கிராம மக்கள் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.
விருந்துண்டு களிக்கிறார்கள். மறுநாள் காலை, பிடித்து மட்கலத்தில் அடைத்து வைத்த பாம்பு களையெல்லாம், எங்கெங்கேயிருந்து பிடித்து வந்தார்களோ, மீண்டும் அங்கேயே கொண்டு போய் மட்கலத்தைத் திறந்து அவற்றை சுதந்திரமாக விட்டு விடுகிறார்கள். இப்படியாக இந்த சிராளா கிராமத்து மக்கள், நாக பஞ்சமி விழாவை சிறப்பாக நடத்தி நிறைவு செய்கிறார்கள். விதவிதமாக, இந்தியா முழுவதும் இப்படி ஆச்சரியப்படும் வகையில் பாம்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.ஆனாலும், மக்களுக்கு நல்ல பாம்பின் மீது பயம் விலகவில்லை. நல்ல பாம்புகளுக்கும் மக்கள் மீது பயம் இருக்கிறது!
தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்
The post உயிருள்ள நாகங்களுடன் நாக பஞ்சமி கொண்டாடும் அதிசய கிராமம்! appeared first on Dinakaran.