×

விண்வெளியில் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்: எலான் மஸ்க் உதவியை நாடும் நாசா?

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ்ஸை மீட்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியை நாட நாசா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருடன் இணைந்து கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு சென்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு இருவரும் கடந்த மாதம் (ஜூலை) 13ம் தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயணத் திட்டம் வரையறுக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் அப்போது பூமிக்கு திரும்பும் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனால் அவற்றை சரிசெய்ய முடியவில்லை. இதனால் தற்போதும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே 2025 பிப்ரவரி மாதம் வரை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா அறிவித்துள்ளது.

மற்றொருபுறம் செப்டம்பர் மாதம் “Crew 9” என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 2 பேர் கொண்ட குழுவை அனுப்புவதற்கு நாசா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் வெற்றிக்கரமாக செயல்படும் பட்சத்தில் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு உதவியுடன் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் பூமிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விண்வெளியில் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்: எலான் மஸ்க் உதவியை நாடும் நாசா? appeared first on Dinakaran.

Tags : Sunita Williams ,NASA ,Elon Musk ,Washington ,Space X ,Earth ,International Space Center ,Sunita ,
× RELATED விண்வெளி மையத்தில் செய்தியாளர்களை...