பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு மாணவர்கள் கத்தியுடன் வந்து மாநகர பஸ்சில் கடும் ரகளை: போலீசாரிடம் ஒப்படைத்த டிரைவர்

திருவொற்றியூர்: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு, கத்தியுடன் வந்து மாநகரப் பேருந்தில் ஏறி அட்டகாசம் செய்த கல்லூரி மாணவர்களை, பேருந்தின் ஓட்டுனர் தானியங்கி கதவை லாக் செய்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் வரை செல்லும் (தடம் எண் 101) மாநகர பேருந்தை, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் பிரபாகரன் நேற்று மாலை ஓட்டி வந்துள்ளார். பீச் ஸ்டேஷன் நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, தனியார் கல்லூரியைச் சேர்ந்த 11 மாணவர்கள் பேருந்தில் ஏறினர்.

அப்போது வரும் வழியில் மாணவர்கள் கூச்சலிட்டபடி ஆபாச பாடல்களைப் பாடி கலாட்டா செய்துள்ளனர். இதில் பேருந்து நடத்துனர், அமைதியாக இருங்கள், இல்லையென்றால் இறங்கி விடுங்கள், பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள் என மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் அதை ஏற்க மறுத்த மாணவர்கள் தொடர்ந்து பாட்டு பாடியபடி பயணம் செய்தனர். இதனா‌ல் பேருந்தில் பயணித்த பெண் பயணிகள் சிலர் பாதி வழியில் பேருந்தை விட்டு இறங்கி விட்டனர்.

மற்றவர்கள் முகம் சுளித்தபடி பேருந்தில் பயணம் செய்தனர். திருவொற்றியூரை நெருங்கும்போது டிரைவர் பிரபாகரனும் கல்லூரி மாணவர்களைப் பார்த்து அறிவுரை கூறினார். ஆனால் அதைக் கேட்காத மாணவர்கள் அவரிடமும் வாக்குவாதம் செய்ததோடு தொடர்ந்து கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி பிரபாகரன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார், திருவொற்றியூர் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கலாட்டா செய்துகொண்டிருக்க, போலீசார் பேருந்தின் தானியங்கி கதவை மூடிவிட்டு உள்ளே சென்று மாணவர்களை விசாரித்து சோதனை செய்தனர்.

சோதனையில் அவர்களிடம் 2 கத்திகள் மற்றும் மது கலந்த குளிர்பான பாட்டிலும் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரையும் ரோந்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து வந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, ஜெயின் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒரு மாணவருக்கு நேற்று பிறந்தநாள். அதனால் அனைவரும் ஒன்று சேர்ந்து மெரினா கடற்கரைக்குச் சென்று அங்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

பின்னர் மெரினா கடற்கரையில் இருந்து மாநகரப் பேருந்து மூலம் பீச் ஸ்டேஷனுக்கு வந்து இறங்கியுள்ளனர். பின்னர் விம்கோ நகர் ரயில் நிலையத்திற்குச் செல்வதற்காக மற்றொரு மாநகர பேருந்தில் ஏறி வந்ததாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவர்களிடமிருந்து 2 கத்திகள், மதுபான குளிர் பாட்டிலை பறிமுதல் செய்த போலீசார் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து விசாரணை செய்து வருகின்றனர். மாநகர பேருந்தில் கலாட்டா செய்த மாணவர்கள் போலீசாரிடம் பிடிபட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு மாணவர்கள் கத்தியுடன் வந்து மாநகர பஸ்சில் கடும் ரகளை: போலீசாரிடம் ஒப்படைத்த டிரைவர் appeared first on Dinakaran.

Related Stories: