ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்தப் பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து குரோம்பேட்டை, குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி வரை செல்லும் புதிய வழித்தடத்திற்கான, சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த புதிய வழித்தடதிற்காக குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய 2 இடங்கள் வழியாக செல்ல ஆய்வுகள் நடைபெறுகிறது.
மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் குரோம்பேட்டை வழியாக பூந்தமல்லி வரை கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய வழித்தடம் தோராயமாக 15 கிலோ மீட்டரை உள்ளடக்கியது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை, பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஆர்வி ஆசோசியேட் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூந்தமல்லி முதல் பரந்தூர் புதிய விமான நிலையம் வரை 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன்அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூர் வரை மொத்தம் 60 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய வழித்தடத்தை அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கு விரிவான திட்ட அறிக்கையும், மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வறிக்கையும் என இரு பணிகளும் வருகின்ற நவம்பர் மாதத்திற்கு உள்ளாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமானத்திற்கு சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையம் என்ற அடிப்படையில் மெட்ரோ வழித்தடம் உருவாக்கப்படும் நிலையில் இந்த புதிய வழித்தடத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தாத இடங்களில் நான்கு கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையமும் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
* மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூர் வரை மொத்தம் 60 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய வழித்தடத்தை அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
* விரைவாக செல்ல முடியும்
பாரந்தூர் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால், பயணிகள் மீனம்பாக்கத்தில் இருக்கும் விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் குறைந்த நேரத்திற்குள் அங்கு செல்ல முடியும். தற்போதுள்ள விமான நிலையத்திலிருந்து குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை வழியாக பூந்தமல்லி வரை சுமார் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதைக்கான சாத்தியக்கூறு ஆய்வு நடந்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) ஏற்கனவே பூந்தமல்லியில் இருந்து பாரந்தூர் விமான நிலையம் வரை 43.63 கிமீ நீட்டிப்புப் பாதையைத் திட்டமிட்டுள்ளது, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த 2 விமான நிலையங்களும் இணைக்கப்படும்போது, மீனம்பாக்கத்திலிருந்து பரந்தூருக்குச் செல்லும் விமானப் பயணிகள் பூந்தமல்லி மெட்ரோவில் உள்ள பிளாட்பார்ம்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் கட்டம்-1 நிலையங்களில் ஏதேனும் ஒரு ரயிலில் ஏறி பரந்தூர் விமான நிலையத்திற்குச் செல்லலாம். இரண்டு விமான நிலையங்களையும் இணைக்கும் பாதை அவசியம் என்பதால் விமான நிலைய மெட்ரோ-பூந்தமல்லி வழித்தடத்திற்கான டிபிஆர் தேவையில்லை, என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
The post சென்னை விமான நிலையத்தை பரந்தூர் விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் மீனம்பாக்கம் – குன்றத்தூர்- பூந்தமல்லி தடத்தில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க ஆய்வறிக்கை: ஆய்வு பணிகளை தொடங்கிய அதிகாரிகள் appeared first on Dinakaran.