×

கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பந்தலூர்,ஆக.9: நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மன்ற அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி 11ம் வார்டு திமுக கவுன்சிலர் ஆலன் (54) என்பவரை நேற்று முன்தினம் நகராட்சி வளாகத்தில் ஒப்பந்ததாரர் தாக்கியதில் ஆலன் பந்தலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று நெல்லியாளம் நகராட்சியின் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் நாகராசா வரவேற்றார். அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.தலைவர் சிவகாமி தீர்மானத்தை வாசித்தார்.

நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர் ஆலன் என்பவர் நேற்று முன்தினம் நகராட்சி வளாகத்தில் வைத்து தேவாலா பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜாகீர் உசேன் மற்றும் பந்தலூர் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் அபுதாஹீர் ஆகியோர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். சம்பவத்திற்கு மூலக் காரணமாக இருந்த மேலும் ஒரு ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் தலைவர் மற்றும் கவுன்சிலருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கவுன்சிலர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றுவதாக தீர்மானத்தை வாசித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட பிற கவுன்சிலர்கள் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க கவுன்சிலர்களுக்கு உரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.

The post கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Nellialam ,Municipal ,Councillor ,Nilgiri District ,Municipality 11th Ward ,DMK ,Councilor Allen ,Dinakaran ,
× RELATED விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க வலியுறுத்தல்