ஊட்டி, ஆக. 9: நீலகிரி மாவட்டத்தில் ரூ.3 லட்சம் மானியத்தில் நவீன சலவையகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதியுதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேற்படி திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் ஊட்டி, பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
The post நீலகிரி மாவட்டத்தில் மானியத்தில் நவீன சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.