தமிழ்நாட்டில் 2030க்குள் 30% பேருந்துகள் மின்சாரமயம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 2030ம் ஆண்டுக்குள் 30 சதவீத பேருந்துகள் மின்சாரமயம் ஆக்கப்பட்டிருக்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். டெல்லியில் பேட்டரி வாகனம் தொடர்பாக நேற்று நடந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில்: இந்தியாவின் ஆற்றல் மாற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும், போக்குவரத்துத் துறையில் டிகார்பனைசேஷன் செய்வதற்கான விரிவான முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு முதல்வர் தலைமையில், தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி மையமாக திகழ்கிறது.

மேலும், ரூ.24,000 கோடி அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலமாக 48,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த இலக்கை ஆதரிக்கும் வகையில், அரசு இயக்கும் பேருந்துகளை மின்மயமாக்குவதை தமிழ்நாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, 2024-25 பட்ஜெட்டில், 3500 புதிய பேருந்துகளில், 500 மின்சார பேருந்துகள் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 2030 க்குள் 30% பேருந்துகள் மின்சாரமயம் ஆக்கபட்டிருக்கும். சமூக நீதியில் மட்டுமல்ல, பருவநிலை நீதியிலும் தமிழ்நாடு, நமது நாட்டிற்கு வழிகாட்டியாக திகழ்கிறது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் 2030க்குள் 30% பேருந்துகள் மின்சாரமயம்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: