காய், கனிகளை விற்பனை செய்ய 192 உழவர் சந்தைகளை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

சென்னை: இடைத்தரகர்கள் இல்லாமல் காய், கனிகளை விற்பனை செய்ய 192 உழவர் சந்தைகளை விவசாயிகள் பயன்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் செயல்பாடுகள் குறித்து வேளாண்மை அதிகாரிகளிடம் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: விளைப்பொருட்களை சேமித்து வைத்து உயர்ந்த விலை கிடைக்கப் பெறும் காலங்களில் விற்பனை செய்திட ஏதுவாக மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 525 சேமிப்புக் கிடங்கு வசதிகள் உள்ளன. எனவே அனைத்து விற்பனைக் கூடங்களையும் சிறந்த முறையில் பராமரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களையும் முறையாக அழைத்து பேசி விளைபொருட்களை வேளாண்மை விற்பனைக்குழு மூலம் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுத்திடவும், ஒவ்வொரு கிராமசபை கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் இத்துறையின் செயல்பாடுகளை விளக்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மின்னணு வேளாண் சந்தை மூலம் பரிவர்த்தனை செய்யும் விவசாயிகள் மற்றும் வணிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக வருமானம் பெற 397 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை செயல்படுத்தும் விதமாக ஆதார நிறுவனங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வணிக திட்டம் தயாரித்து அவர்கள் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கும், உள்ளூர், மாநில, தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை திறமையான நிறுவனமாக உருவாக்கிட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கிட வேண்டும்.

கிராமப்புறங்களில் தேவைப்படும் சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், சிப்பம் கட்டும் வசதிகள், தரம் பிரிப்பு வசதிகள் போன்றவற்றை வேளாண் கட்டமைப்பு நிதி மூலம் தனியார் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் உருவாக்கிடும் பொருட்டு வங்கிகளில் பெறப்படும் ரூ.2 கோடி வரையிலான கடன் மீது 7 ஆண்டுகளுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை 6,854 நபர்களுக்கு ரூ.1,950 கோடி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான காய், கனிகளை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாட்டில் 192 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. உழவர் சந்தைகளில் வரத்தினை அதிகரித்திட தோட்டக்கலை துறையும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்திற்கு வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளர் அபூர்வா முன்னிலை வகித்தார்.

The post காய், கனிகளை விற்பனை செய்ய 192 உழவர் சந்தைகளை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: