×

பட்டினப்பாக்கம் தொல்காப்பிய பூங்காவில் ரூ.9.35 கோடியில் புதிய தொங்கு பாலம்

சென்னை: பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் ரூ.9.35 கோடியில் தொங்கு பாலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞர், கடந்த 2007ம் ஆண்டு அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல்காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் 2011ம் ஆண்டில் அதை திறந்துவைத்தார். தொடர்ந்து வந்த அதிமுக அரசு, அப்பூங்காவை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என பெயர் மாற்றம் செய்தது. அங்கு தொல்காப்பிய பூங்கா என வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையும் அகற்றப்பட்டது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பூங்காவை பார்வையிட்டார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். பின்னர் அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் பூங்காவுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரிட்டிருந்தவாறு மீண்டும் பெயரிடுமாறு சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அந்த பூங்காவுக்கு மீண்டும் தொல்காப்பிய பூங்கா என பெயரிடப்பட்டது. அந்தப் பெயரில் பெயர் பலகையும் பூங்காவின் நுழைவாயிலில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2023 ஜூன் மாதம் ரூ.20 கோடியில் தொல்காப்பிய பூங்காவை மறு சீரமைப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பூங்காவின் நடைபாதை, பூங்கா முகப்பு சீரமைப்பு, பார்வையாளர்கள் இடம், குழந்தைகள் உரையாடும் இடம், பார்வையிடும் இடம், பார்வையாளர்கள் கோபுரம், கண்காட்சி பகுதி என மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடந்த 2023 மே மாதம் 23ம் தேதி தொல்காப்பிய பூங்காவில் ரூ.9.35 கோடியில் தொங்குபாலம் அமைப்பதற்காக நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post பட்டினப்பாக்கம் தொல்காப்பிய பூங்காவில் ரூ.9.35 கோடியில் புதிய தொங்கு பாலம் appeared first on Dinakaran.

Tags : Pattinpakkam Tolkappiya Park ,CHENNAI ,Tolkappiyar Park ,Pattinappakkam ,chief minister ,Tolkappiya Park ,Adyar ,Dinakaran ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!