- ஒலிம்பிக் ஆண்கள்
- இந்தியா
- ஸ்பெயின்
- கேப்டன் ஹர்மன்பிரீத்
- ஒலிம்பிக்
- இந்தியா லீக்
- ஒலிம்பிக்
- கேப்டன் ஹர்மன்பிரீத் அபாரம்
- தின மலர்
ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது. நடப்பு தொடரின் பி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா லீக் சுற்றின் முடிவில் 3 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. அதில் கிரேட் பிரிட்டனுடன் மோதிய இந்தியா 1-1 என டிரா செய்ததைத் தொடர்ந்து, பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டதில் 4-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அதே வேகத்துடன் பைனலுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெர்மனியுடன் அரையிறுதியில் மோதிய இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் போராடி தோற்று தங்கம் அல்லது வெள்ளி வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயின் அணியை 4-0 என்ற கணக்கில் பந்தாடிய நெதர்லாந்து பைனலுக்கு முன்னேறியது. இந்த நிலையில், வெண்கலப் பதக்கத்துக்கான மோதலில் இந்தியா – ஸ்பெயின் அணிகள் நேற்று பலப்பரீட்சையில் இறங்கின. முதல் 15 நிமிட ஆட்டத்தில் கோல் ஏதும் விழாததால் இரு அணிகளும் 0-0 என சமநிலை வகித்தன.
2வது குவார்ட்டரில் மார்க் மிரால்லெஸ் கோல் அடித்து அசத்த (18வது நிமிடம்) ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து, பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய இந்திய அணிக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 30வது நிமிடத்தில் அபாரமாக கோல் போட்டு 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். இடைவேளைக்குப் பிறகு தொடங்கிய 3வது குவார்ட்டரில் துடிப்புடன் ஒருங்கிணைந்து விளையாடி ஸ்பெயின் கோல் பகுதியை முற்றுகையிட்ட இந்திய அணிக்கு, 33வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் தனது 2வது கோலை அடித்து 2-1 என முன்னிலை கொடுத்தார்.
அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி தொடர்ந்து 2வது முறையாக வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி வரலாற்றில் இந்தியா இதுவரை 8 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை அள்ளியுள்ளது. நடப்பு தொடரில் இந்தியா வென்ற 4வது பதக்கம் இது.
நான்குமே வெண்கலப் பதக்கங்கள் தான். முன்னதாக, துப்பாக்கிசுடுதலில் இந்தியா 3 வெண்கலம் வென்றிருந்தது. ஹாக்கியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
* விடை பெற்றார் ஸ்ரீஜேஷ்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த இந்திய அணி கோல் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (37 வயது) வெண்கலப் பதக்கம் வென்ற திருப்தியுடன் விடை பெற்றார். நடப்பு தொடரில் ஒரு சுவர் போல உறுதியாக நின்று எதிரணி வீரர்களின் பல கோல் முயற்சிகளைத் தடுத்து வெளியேற்றி சிறப்பாகப் பங்களித்த ஸ்ரீஜேஷுக்கு சக வீரர்கள் அனைவரும் தலை வணங்கி மரியாதை செலுத்தியதுடன், தோள்களில் சுமந்தபடி மைதானத்தை வலம் வந்து கொண்டாடி மகிழ்ந்தனர். ஸ்பெயின் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீஜேஷ், ‘எனது ஹாக்கி வாழ்க்கையை சிறப்பாக நிறைவு செய்திருக்கிறேன். வெறும் கையுடன் நாடு திரும்பவில்லை என்பதில் திருப்தி. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்’ என்றார். இந்திய அணி 52 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 2 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம் கொச்சி, கிழக்கம்பலத்தை சேர்ந்த பி.ஆர்.ஸ்ரீஜேஷ் பத்மஸ்ரீ (2017), கேல் ரத்னா (2021) விருதுகள் பெற்றுள்ளார்.
ஹாக்கியில் இந்திய பதக்கங்கள்
ஒலிம்பிக் பதக்கம்
ஆம்ஸ்டர்டாம் 1928 தங்கம்
லாஸ் ஏஞ்சல்ஸ் 1932 தங்கம்
பெர்லின் 1936 தங்கம்
லண்டன் 1948 தங்கம்
ஹெல்சிங்கி 1952 தங்கம்
மெல்போர்ன் 1956 தங்கம்
ரோம் 1960 வெள்ளி
டோக்கியோ 1964 தங்கம்
மெக்சிகோ சிட்டி 1968 வெண்கலம்
மூனிச் 1972 வெண்கலம்
மாஸ்கோ 1980 தங்கம்
டோக்கியோ 2020 வெண்கலம்
பாரிஸ் 2024 வெண்கலம்
The post ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: வெண்கலம் வென்றது இந்தியா; ஸ்பெயினை வீழ்த்தி 3வது இடம்; கேப்டன் ஹர்மன்பிரீத் அபாரம் appeared first on Dinakaran.